கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி.. அதிகரிக்கும் பலி.. சீனாவில் மாட்டி தவிக்கும் தமிழர்களின் குமுறல்..!

Report
76Shares

சீனாவை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. பலரின் உயிர்களை பறித்துள்ள அந்த வைரஸ் அங்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் நேற்று காலை ஒரே நாளில் 15 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 41 ஆக உயர்ந்தது. பலியானோர் அனைவரும் 55 வயது முதல் 87 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 11 பேர் ஆண்கள். 4 பேர் பெண்கள். சீனா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 1,300 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 13 பேர் பலியான நிலையில், பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது என உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று 323 பேர் கூடுதலாக பாதிப்பு அடைந்து உள்ளனர் என பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழர்கள் தவிப்பு

இதைத்தொடர்ந்து, சீனாவில் உள்ள ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் ஓட்டல்கள், ஐ.டி.கம்பெனிகளில் சென்னை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தமிழர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியால் போதுமான உணவு, தண்ணீர் இன்றி அங்கு தவித்து வரும் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து, உகான் நகரில் ஓட்டலில் பணியாற்றி வரும் தேவகோட்டையை சேர்ந்த மூர்த்தி என்பவர் கண்ணீர்மல்க கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான உகான் நகரில் தமிழகத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். ஓட்டல்கள், ஐ.டி.கம்பெனி, கல்வி நிலையங்கள் என பல்வேறு பணிகளை செய்து வரும் நாங்கள் 70 பேர் கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாமல் அறைகளிலேயே முடங்கி கிடக்கிறோம்.

மீதம் உள்ளவர்கள் நிலைமை என்ன ஆகியுள்ளது என தெரியவில்லை. ஓட்டல்கள் மூடப்பட்டதால் உணவு கிடைப்பது இல்லை. இதனால் பசியோடும், பட்டினியோடும் நாட்களை கழிக்கிறோம். சொந்த ஊர்களுக்கும் திரும்பமுடியாமல் தவித்து வருகிறோம்.

உரிய மருத்துவ பரிசோதனைகளை செய்து, நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு எங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புங்கள். சொந்த ஊர்களுக்கு வெளியே தனியாக அறை எடுத்து கொடுங்கள். நாங்கள் அங்கே நோய் தொடர்பான பீதி தணியும் வரையிலும் தங்கி இருக்கிறோம் என்று எங்களுடையை நிலைமையை இந்திய தூதரக அதிகாரிகளிடம் கூறினோம். ஆனால் அவர்கள் எந்த பதிலையும் சொல்லவில்லை.

ஒவ்வொரு நாளும் மரண வேதனையை அனுபவித்து வருகிறோம். செத்து, பிழைத்து வருகிறோம். எனவே பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழர்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களை பத்திரமாக மீட்டு, தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கண்ணீருடன் கூறியுள்ளார்.

3181 total views