ஈழத்து சிவன் ஆலயத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்! தமிழர்களின் விலைமதிக்க முடியாத பொக்கிஷமாக மாறிய ஆச்சரியம்

Report
316Shares

தமிழர்களின் தொன்மைமிகு அடையாளமாக என்றும் வானளாவிய அளவு உயர்ந்திருக்கும் ஆதாரங்களில் ஆலயங்களுக்கு முதலிடம் உண்டு.

பலருக்கு தெரியாத இலங்கையில் உள்ள திருகோணமலை லிங்கபுரம் திருமங்களாய் சிவன் ஆலயத்தை பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம்.

ஈழத்தில் இருக்கும் தமிழர்களின் பொக்கிஷமாக இது கருதப்படுகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமங்களாய் காட்டுப் பகுதிக்குள் கள ஆய்வுகளுக்காகச் சென்ற ஆய்வாளர்கள் இந்த ஆலய பகுதியில் இருந்து ஐந்து தமிழ்க் கல்வெட்டுக்களை கண்டுபிடித்திருந்தனர்.

இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

குறித்த பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து கல்வெட்டுக்களில் மூன்று கல்வெட்டுக்கள் கி.பி. 10 ஆம் - 11 ஆம் நூற்றாண்டையும், ஏனைய இரண்டு கல்வெட்டுக்கள் கி.பி. 14 ஆம் - 15 ஆம் நூற்றாண்டையும் சேர்ந்தவை என்பதை அவற்றின் எழுத்தமைதி கொண்டு ஆய்வாளர்கள் கணிப்பிட்டிருந்தனர்.

குறித்த பிரதேசம் செறிவான தமிழ்க் குடியிருப்புக்களைக் கொண்ட பிரதேசமாக விளங்கியதுடன், அவ்விடம் முன்னர் திருமங்களாய் என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.

இப்பிரதேசத்தில் இருந்து 1964 இன் பின்னர் மக்கள் படிப்படியாக வேறு இடங்களுக்கு சென்று குடியேறியதால், ஏறத்தாழ ஏழு மைல் சுற்று வட்டம் பெருங்காடாகவே காணப்படுகிறது.

அதிலும் 1985 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக தமிழர்களின் புராதன வாழ்விடமாக இருந்த திருமங்களாய் கிராமத்துடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டு, அக்கிராமம் காடுகளால் சூழப்பட்டது.

அப்பிரதேசத்தில் உள்ள கல்வெட்டுக்கள் தமிழர் வரலாறு, தமிழர் மதம் பற்றிய ஆய்வில் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களாக விளங்கும் என்பது உறுதியாகும்.

குறித்த கல்வெட்டுக்கள் முழுமையாக வாசித்து முடிக்கும் கட்டத்தில் இங்குள்ள ஆலயம் முதல் மூன்று கல்வெட்டுக்களின் காலத்தில் இலங்கையில் ஆட்சியிலிருந்த சோழ ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதா?

அல்லது அவர்கள் ஆட்சிக்கு முன்பின்னாக அல்லது சோழர் ஆட்சியில் இங்கிருந்த தமிழர்களால் கட்டப்பட்டதா? என்ற உண்மை தெரிய வரும். இக்கல்வெட்டுக்களின் சில பாகங்கள் சிதைவடைந்துள்ளது.

இருப்பினும் வேறுபட்ட காலங்களில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டுக்களில் இருந்து இவ்வாலயத்திற்கு நீண்ட வரலாறு இருப்பது தெரிகிறது.

இதற்கு திருகோணமலையில் உள்ள வரலாற்றுப் பழமை வாய்ந்த ஆலயங்கள் பற்றி கூறும் தலபுராணங்களில் ஒன்றான திருகரைசை புராணத்திலும் இவ்வாலயம் பற்றிக் கூறியிருப்பது இதன் பழமைக்கு மேலும் சான்றாகும்.

தமிழ் தலைமுறை தலைகீழாக தடம்புரண்டு கொண்டிருக்கின்றது. இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழர்களின் பொக்கிஷங்களை காப்பது மாத்திரம் அல்ல அதை பற்றி அனைவருக்கும் அறியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

11989 total views
loading...