தாயால் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளங் குழந்தை... நாயால் மீட்கப்பட்ட அதிசயம்!

Report
216Shares

தாய்லாந்தில் தனது தாயால் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பச்சிளம் குழந்தையை நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.

தனது கர்ப்பத்தை பெற்றோர்களிடமிருந்து மறைப்பதற்காக அந்த 15 வயது இளம் பெண், இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

பேன் நாங் காம் என்ற கிராமத்தில் பிங் பாங் என்ற அந்த நாய் குரைத்துக் கொண்டே மண்ணை தோண்டியுள்ளது. இதை கவனித்த அந்த நாயின் உரிமையாளர் குழந்தையின் கால் ஒன்று மண்ணில் தெரிவதை கவனித்துள்ளார்.

உடனே உள்ளூர்வாசிகள் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை சுத்தம் செய்த மருத்துவர்கள் குழந்தை நலமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

கார் விபத்து ஒன்றுக்கு பிறகு பிங் பாங்கின் கால்களில் ஒன்று பயனற்று போனதாக அதன் உரிமையாளர் உசா நிசாய்கா தெரிவித்துள்ளார்.

"பிங் பாங் மிகவும் விசுவாசமாகவும், சொல்வதை கேட்டும் நடந்து கொள்ளும். நான் எனது கால்நடைகளை மேய்க்க செல்லும்போது பிங் பாங் எனக்கு உதவி செய்யும். கிராமத்தினர் அனைவரும் அவனை நேசிக்கின்றனர். அவன் அற்புதமானவன்." என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்த குழந்தையின் தாய் மீது, பச்சிளம் குழந்தையை கைவிடல் மற்றும் கொலை செய்ய முயற்சி செய்தல் ஆகிய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது அவரது பெற்றோர்களின் கவனிப்பிலும், மனநல ஆலோசனைகளை பெற்று வருகிறார் என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் தனது செயல்களுக்காக அந்த தாய் வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார். அந்த பெண்ணின் பெற்றோர் குழந்தையை வளர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

7530 total views