சிறுவர்கள் புகைபிடிக்கும் வினோத திருவிழா: எங்கு தெரியுமா??

Report
62Shares

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 6-ம் தேதி போர்ச்சுகல் நாட்டின் வேல் டி சல்குரியோ கிராமத்தில் திருவிழா நடைபெறுகிறது.

அப்போது கேக் சாப்பிடுவார்கள், கீதங்கள் இசைப்பார்கள், பெற்றோர் தங்கள் குழந்தைகளை புகைப்பிடிக்க அனுமதிப்பார்கள்.

பல நூற்றண்டுகளாக இந்தப் பழக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுவாக போர்ச்சுகல் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் சட்டப்பூர்வமாகப் புகைப்பிடிக்க முடியும். ஆனால் இந்தத் திருவிழா நடைபெறும் 2 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

இதில் 5 வயது குழந்தைகள் முதல் புகைப்பிடிக்கிறார்கள். இதைப் போர்ச்சுகல் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களே எதிர்க்கிறார்கள்.

ஆனால் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அது தங்களின் பாரம்பரியம் என்றும் இதில் பிறர் தலையிட முடியாது என்றும் கூறுகிறார்கள்.

“இரண்டு நாட்கள் புகைப்பிடிப்பதால் குழந்தைகள் அனைவரும் சிகரெட்டுக்கு அடிமையாகிவிடுவதுபோல் சொல்கிறார்கள். அது தவறு.

குழந்தைகள் நிஜமாகவே புகைப்பதில்லை. உள் இழுக்கும் புகையை உடனே வெளியிட்டுவிடுவார்கள். இதை திருவிழாவுக்கான ஒரு சடங்காகத்தான் பார்க்கிறார்கள்.

இந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு யாரும் சிகரெட் வேண்டும் என்று கேட்பதில்லை” என்கிறார் குல்ஹெர்மினா மேட்டஸ்.

“புகைப்பிடிப்பது நுரையீரலுக்கு கெடுதல் என்று எங்கள் எல்லோருக்குமே தெரியும். அதனால் நாங்கள் திருவிழாவைத் தவிர்த்து, சிகரெட் கேட்பதில்லை” என்கிறார் 6 வயது டோமாஸ். “எனக்கு 88 வயதாகிறது. நானும் 5 வயதில் இந்தத் திருவிழாவின்போது புகைப்பிடித்திருக்கிறேன்.

ஆனால் ஒருநாளும் அதை வழக்கமாக மாற்றிக்கொள்ள எண்ணியதில்லை. பிறகு என் குழந்தைகளும் இந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்றினார்கள்.

இன்று என் பேரக் குழந்தைகளும் இதைத் தொடர்கிறார்கள். எங்கள் வீட்டில் யாருமே புகைப்பிடிப்பதில்லை. அதனால் இதைப் பெரிய விஷயமாக எல்லோரும் பேச வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார் எட்வர்டோ அகஸ்டோ.

மற்ற சில ஐரோப்பிய நாடுகளைப் போலவே போர்ச்சுகலும் புகைப்பிடிப்பதைக் குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. திருவிழாவில் புகைப்பிடிப்பதற்கு தடை வருமோ என்று கிராம மக்கள் கவலைப்படுகிறார்கள்.

சிறுவர்களும் புகைக்கும் விநோதமான திருவிழா!

2457 total views