நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கப சுரக் குடிநீர்... வாங்குவதற்கு அலைமோதும் மக்கள்!

Report
529Shares

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக தமிழக சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்த கபசுர குடிநீரை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது கூட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட மருத்துவ முறைகளை உள்ளடக்கிய ஆயுஷ் துறை வல்லுநர்களுடன் பிரதமர் மோடி இரு தினங்களுக்கு முன்பு, ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில், கொரோனா வைரஸ் அறிகுறிகளான சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை தினசரி 2 முறை தலா 60 மில்லி பருக சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு எப்படி நிலவேம்பு குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதோ, அதே போன்று கொரோனா தொற்றுக்கு எதிராக கபசுரக் குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என மத்திய அரசின் ஆயுஸ் துறை, நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுர சூரணத்தை பரிந்துரை செய்துள்ளது.

இதையடுத்து சென்னை திருவான்மியூரில் உள்ள மத்திய அரசின் மருந்து நிறுவனமான இம்காப்ஸ் மருத்துவமனையில் கபசுர சூரணத்தை வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். 10 கிராம் அளவுள்ள கபசுர சூரணம் 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சுக்கு, திப்பிலி, இலவங்கம், ஆடாதொடை இலை, சீந்தில், சிறுதேக்கு, வட்டத்திருப்பி வேர், கோரைக்கிழங்கு, நிலவேம்பு, கற்பூரவல்லி இலை, கடுக்காய் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் எனவும் தெரிவிக்கின்றனர்.

கபசுரக் குடிநீர் தான் கொரோனாவுக்கு மருந்து என, எந்த சித்த மருத்துவரும் ஆதார பூர்வமாக நிரூபிக்கவில்லை என்றாலும் கூட, அதனை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் எனக் கருதி கபசுரக் குடிநீரை மத்திய அரசின் ஆயுஷ் துறை பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தனியார் ஆயுர்வேத, சித்த மருந்து கடைகளிலும் கபசுர சூரணம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

loading...