நித்தியானந்தா தற்போது எங்கு இருக்கிறார்? அவரே வெளியிட்ட தகவல் இதோ....

Report
314Shares

சாமியார் நித்தியானந்தா பல சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், தற்போது தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் இமயமலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையை பூர்வீகமாகக் கொண்ட நித்யானந்தா, பெங்களூர் அருகே உள்ள பிடதியில் பல ஏக்கர் பரப்பளவில் நித்யானந்த ஆசிரமத்தை நடத்திவந்தார். பிடதியில் தலைமை ஆசிரமம் இருந்தாலும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இவருக்கு ஆசிரமங்களும் பக்தர்களும் உண்டு.

இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவருக்கு பக்தர்கள் அதிகம் என்றே கூறலாம். மிகவும் குறுகிய காலத்தில் ஆன்மிக உலகின் புகழின் உச்சத்திற்கு சென்ற நித்தியானந்தா பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.

கடந்த சில மாதங்களாக நித்தியானந்தா எங்கு சென்றுள்ளார் என்பதை நோட்டமிட்டு வந்த உளவுத்துறை, தற்போது வெளிநாட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டு வந்ததையடுத்து தற்போது நித்தியானந்தா இவ்வாறு கூறியுள்ளது குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஜனார்த்தன சர்மா என்பவர் தனது 4 மகள்களையும் நித்தியானந்தாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ள நிலையில், தனக்கு தெரியாமல் தனது மகளை குஜராத்திற்கு மாற்றியுள்ளதாகவும் அவர்களை மீட்டுத் தருமாறும் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதன் பின்பு குஜராத் பொலிசாரின் உதவியுடன் இரண்டு மகள்களை மீட்டார். ஆனால் அவரது லோபமுத்ரா மற்றும் நந்திதா இருவரும் பெற்றோருடன் செல்வதற்கு மறுத்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஆசிர நிர்வாகிகள் இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் லோப முத்ரா, நந்திதா ஆகியோர் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர்கள் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்தது.

எனவே நித்யானந்தாவும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என குஜராத் பொலிசார் கருதிய நிலையில், நித்தியானந்தாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள நித்தியானந்தா காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இங்கு ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகள் பெற்றோரைப் பார்ப்பதற்கும், பெற்றோர் பிள்ளைகளை பார்ப்பதற்கும் எந்தவொரு தடையும் கிடையாது.

சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பார்த்துவிட்டு இங்கேயே தங்கிவிட்டும் செல்கின்றனர். அப்படியிருக்கையில் இங்குள்ள குழந்தைகள் யாரும் துன்புறுத்துதலுக்கு ஆளாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் தற்போது இமயமலையில் இருக்கிறேன். மிகப்பெரிய ஆன்மீக செயலை செய்து முடிப்பதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும். பரமசிவனும், கால பைரவரும், மகா காளியும் அதை விரும்புகிறார்கள். தினசரி காலையில் சத்சங்கம் மூலம் உலகம் முழுவதும் உள்ள எனது சீடர்களை தொடர்பு கொள்கிறேன். அதை தவிர எனது சீடர்களுக்கு நான் எந்தவித தனிப்பட்ட ஆலோசனைகளையும் வழங்குவதில்லை என்று கூறியுள்ளார்.