பிறந்த குட்டி யானையை சீண்டிய மக்கள்.. தாய் யானையின் கோபம்.. உதவ வந்த யானை கூட்டங்கள்!..

Report
380Shares

மேற்கு வங்க மாநிலம் மெடினிபூர் என்ற மாவட்டத்தில் உள்ளது அஜ்னசுலி என்ற கிராமம். இந்தக் கிராமத்தின் காட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு வறண்ட ஏரியில் கடந்த வெள்ளிக்கிழமை யானை ஒன்று குட்டி போட்டுள்ளது. அதை அறிந்த ஊர் மக்கள் ஏரிப் பகுதிக்குத் திரண்டு யானையும் குட்டியையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.

இதற்கிடையில் மோசமான உடல்நிலையுடன் பிறந்த குட்டி யானை எழுந்து நிற்பதற்குத் திணறியுள்ளது. குட்டியைச் சரிசெய்து அதைக் காட்டுக்குள் அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தது தாய் யானை. அந்த நேரத்தில் யானைகளைச் சுற்றி மக்கள் கூட்டம் அதிகமானதால் அவர்களால் தன் குட்டிக்குத் தீங்கு நேரிடுமோ என்பதை உணர்ந்த யானை பதற்ற நிலைக்குச் சென்றுள்ளது.

தாய் யானையை சீண்டிய மக்கள்

முதலில் மக்களிடமிருந்து தன் குட்டியைப் பாதுகாக்க ஏரியில் இருந்த மண்ணைக் கிளறிவிட்டு புழுதியாக்கியுள்ளது. அப்போதே, `யாரும் தன் அருகில் வராதீர்கள்’ எனத் தன் சைகைகளால் மனிதர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது தாய் யானை. இவை அனைத்துக்கும் நடுவே தன் குட்டியை எழுந்து நிற்க வைக்கும் முயற்சிகளிலும் வேக வேகமாக ஈடுபட்டு வந்துள்ளது. அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் யானை மீதும் அதன் குட்டி மீதும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த தாய் யானை மக்கள் கூட்டத்தை நோக்கி ஓடி வந்து அருகில் இருந்த 27 வயதான ஷைலன் மஹடோ என்ற இளைஞரை மிதித்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து காட்டுக்குள்ளிருந்து சுமார் பத்து யானைகள் ஏரிக்கு வந்து தாய் மற்றும் குட்டி யானைக்குப் பாதுகாப்பு அளித்துள்ளது. அதில் மூன்று யானைகள் மக்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளது. தாய் யானை மிதித்ததில் இளைஞர் மஹடோ உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றிப் பேசியுள்ள அஜ்னசுலி பகுதி வன அதிகாரிகள்:

``பிறந்த குட்டி யானையின் உடல் நிலை தற்போது வரை மோசமாகவே உள்ளது. அதனால் எழுந்து நிற்க முடியவில்லை. அதனால் குட்டி யானையைக் காட்டுக்குள் அழைத்துச் செல்ல முடியாமல் தாய் தவித்து வருகிறது. ஏரி பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குட்டியையும் அதன் தாயையும் நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். தாய் யானை மிகவும் கோபமாக இருப்பதால் எங்களாலும் அதன் அருகில் சென்று குட்டி யானையைக் காட்டுக்குள் விட முடியவில்லை.

தாய் யானை சற்று அமைதியான பிறகு அருகில் செல்ல முடியும்’ எனக் கூறியுள்ளனர். தன் குட்டியைப் பாதுகாக்கும் தாய் யானையின் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.