முகத்தில் கொசு மருந்து அடித்து நகையை திருடிய காமெடி திருடன்....

Report
54Shares

வீட்டுக்குள் புகுந்து முகத்தில் ஹிட் கொசு மருந்து அடித்து 8 சவரன் நகையைப் பறித்துச் சென்ற திருடன் கண்காணிப்பு கேமராவில் வகையாக சிக்கிய பின் கைது செய்யப்பட்டார்.

சென்னை அபிராமபுரம் 3-வது குறுக்குத்தெருவில் வசிப்பவர் லதா (68). இவரது கணவர் ஏசி மெக்கானிக். தனியாக ஏசி மெக்கானிக் நிறுவனம் நடத்தி வந்தார்.

இவரது நிறுவனத்தில் ஏராளமானோர் வேலை செய்து வந்தனர். லதாவின் கணவர் கடந்த டிசம்பர் மாதம் மரணமடைந்தார்.

தனது கணவரின் மரணத்திற்குப் பின் லதா தனியாக வசித்து வருகிறார். அவரது குடியிருப்பின் கீழ்தளத்தில் உறவினர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை லதாவின் வீட்டுக்கதவு தட்டப்பட்டுள்ளது. கதவைத் திறந்த லதா அதிர்ச்சி அடைந்துள்ளார். முகத்தில் கர்ச்சீப் கட்டிய நபர் ஒருவர் லதாவின் முகத்தில் ஹிட் கொசு மருந்தை அடித்துள்ளார்.

இதனால் நிலைகுலைந்த லதாவை வீட்டுக்குள் தள்ளி கதவை சாத்திய அந்த நபர் போட்டிருக்கும் நகைகளை கழற்று என்று மிரட்டியுள்ளார். இதற்கு மறுத்த லதா மீது மீண்டும் கொசு மருந்தை அடித்து மிரட்டியுள்ளார். இதையடுத்து லதா தான் கையில்,கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் வளையல்கள் மற்றும் செயினைக் கழற்றிக் கொடுத்துள்ளார்.மீண்டும் அந்த நபர் கொசு மருந்தை அடித்ததில் லதா அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார். அவர் உயிரிழந்து விட்டார் என்று அதிர்ச்சியில் பயந்துபோன அந்தத் திருடன் தப்பி ஓடிவிட்டார்.

அந்த நேரம் உறவுக்காரப் பையன் லதா வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் அவர் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பியுள்ளார்.மயக்கம் தெளிந்து எழுந்த லதா நடந்ததைக் கூறியுள்ளார். இதையடுத்து அவரை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார் உறவுக்காரப் பையன். “கொசு மருந்து அடித்து திருட்டா? வினோதமாக இருக்கே, என்ன திருடன் இவன்” என்று போலீஸார் சிரித்துள்ளனர்.போலீஸார் லதாவிடம் நடத்திய விசாரணையில், 'வீட்டுக்கு அந்நிய ஆண்கள் வேறு யாரும் வருவதுண்டா?' என்று கேட்டுள்ளனர்.

'ஒரே ஒருவர்தான் வருவார். என் கணவரிடம் ஏசி மெக்கானிக்காக வேலை செய்தவர் அவர் பெயர் வினயராகவன்' என்று கூறியுள்ளார். 'அவர் மீது சந்தேகம் உள்ளதா?' என்று போலீஸார் கேட்ட போது, 'அதெல்லாம் இல்லை, மதியம்கூட வீட்டுக்கு வந்துவிட்டுத்தான் சென்றார்' என்று லதா கூறியுள்ளார்.

குடியிருப்பில் உள்ள கண்கணிப்பு கேமரா பதிவை போலீஸார் சோதனை செய்து பார்த்தனர். அதில் மாலை 6.40க்கு ஒரு நபர் கர்ச்சீப் கட்டி உள்ளே வருவது தெரியவந்தது. ஆனால் அந்த நபர் அவரையும் அறியாமல் படிக்கட்டின் அருகே வரும்போது கர்ச்சீப்பைக் கழற்றியுள்ளார். அப்போது அவர் முகம் முழுவதும் பதிவாகியிருந்தது.

அப்படத்தை லதாவிடம் காட்டியபோது அவர் அதிர்ந்துபோனார். இவர் எங்களிடம் வேலை பார்த்த வினயராகவன் தான் என்று லதா கூறியுள்ளார். இதையடுத்து அவர் குடியிருக்கும் தி.நகர் ராஜா தெருவுக்குச் சென்றுள்ளனர். அங்கு வீட்டுக்குள் மது அருந்தியபடி அமர்ந்திருந்த வினயராகவனை போலீஸார் கையும் களவுமாகப் பிடித்து நகைகளை மீட்டனர்.

போலீஸ் விசாரணையில், ''லதாவின் கணவர் தனக்கு மிகவும் உதவுவார், அவர் இறப்பதற்கு முன்னர் 25 ஆயிரம் கேட்டிருந்தேன். அதை தருவதற்குள் அவர் மறைந்துவிட்டார். அவர் மறைந்தாலும் அவரது வீட்டுக்கு அடிக்கடி போய் வருவேன்.

சிறு சிறு உதவி செய்வேன். அவர் மனைவியும் கைச்செலவுக்கு அவ்வப்போது பணம் தருவார்.ஆனால் எனக்கு அதிகப் பணம் தேவைப்பட்டது. அப்போதுதான் லதா கழுத்தில் கையில் போட்டுள்ள தங்க நகைகள் உறுத்தியது. அதைத் திருட திட்டம் போட்டேன்.

முகத்தில் கர்ச்சீப் கட்டி மாறுவேடத்தில் வந்து பறிக்கத் திட்டமிட்டு அதேபோல் செய்தேன். லதா மீது மருந்து அடித்ததால் அவர் உயிரிழந்துவிட்டார் என்று நினைத்து ஓடிவந்துவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.

முதன்முறையாகத் திருட முடிவெடுத்து அதையும் தனக்குத் தெரிந்தவர்கள் வீட்டிலேயே திருட முயன்று முதல் முயற்சியிலேயே சிக்கி கைதான அப்ரண்டீஸ் திருடன் வினயராகவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

loading...