இளைஞரின் பாசத்தால் அரங்கேறிய கொடுமை... மூதாட்டியின் அவலநிலை

Report
143Shares

சென்னையில் மூதாட்டி ஒருவரிடம் தனது தாய் போல் இருப்பதாக பாசத்தை பொழிந்த திருடன் ஒருவன், மூதாட்டியின் மனதை மாற்றி நகையை பறித்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது

செயின் பறிப்பு, கத்தியைக் காட்டி வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் ஒரு வகை என்றால், வயதானவர்களை, பெண்களை குறிவைத்து அவர்களுக்கு உதவுவது போல் நடித்து கவனத்தை திசை திருப்பி திருடும் சம்பவங்கள் ஒரு வகை.

தேனாம்பேட்டையை சேர்ந்த ஜானகி, ஆழ்வார்ப்பேட்டை சீத்தாம்மாள் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிப் பெண்ணாக உள்ளார்.

அலுவலகத்தில் இருந்து வேலை முடித்து வெளியில் வந்த மூதாட்டி ஜானகியை பார்த்த நபர் ஒருவர் வாஞ்சையுடன் அம்மா என்று அழைத்துள்ளார். யார் அந்த நபர் என புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டி ஜானகியின் அருகில் வந்த அந்த நபர், பார்ப்பதற்கு தன்னை பெற்ற தாய் போல் இருப்பதாகவும், மறைந்த தனது தாயை மூதாட்டியின் முகம் நினைவுப்படுத்திவிட்டது எனக் கூறி கண்ணீர் விட்டுள்ளார். அவரது கண்ணீரைக் கண்டு மனமிறங்கிய மூதாட்டி அந்த நபருக்கு ஆறுதல் கூற, வெகு நேரம் பாசத்துடன் பேசிக் கொண்டிருந்துள்ளார் அந்த நபர்.

உயிருடன் இருக்கும் போது எனது தாய்க்கு ஒன்றும் செய்யாமுடியாத நிலையில் இருந்தேன், எனவே தாயின் உருவத்தில் இருக்கும் உங்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன் கூறி, மூதாட்டி ஜானகி அணிந்துள்ள பழைய தங்கச்சங்கிலிக்கு பதிலாக புதிய தங்கச்சங்கிலியை தருவதாகக் கூறியுள்ளான். மகன் போல் பாசம் காட்டியது அத்தனையும் நகையை பறிக்க நடக்கும் வேஷம் என தெரியாமல் தான் அணிந்திருந்த 6 சவரன் சங்கிலியை ஜானகி கொடுத்துவிட, புதிய 8 சவரன் சங்கிலி என்று கூறி ஒரு சிறிய பெட்டியை அந்த நபர் கொடுத்துள்ளார்.

மேலும், ஏதேதோ பேசிய அந்த நபர் அடிக்கடி தொடர்பு கொண்டு பேச என்னிடம் செல்போன் இல்லை என கூறி மூதாட்டியிடம் செல்போனையும் வாங்கிக் கொண்டு மாயமாகிவிட்டார். பின்னர் அந்த நகை பெட்டியை பார்த்த ஜானகி, அதில் எதுவுமே இல்லாததால் அதிர்ச்சியுற்று, நடந்த சம்பத்தைக் கூறி தேனாம்பேட்டை பொலிசில் புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து திருடனை தேனாம்பேட்டை பொலிசார் தேடி வருகின்றனர்.

ஆசையைத் தூண்டி நகை பணத்தை கொள்ளையடிக்கும் எத்தனையோ சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், திருடன் ஒருவன் தாய் பாசத்தை பயன்படுத்தி தங்க நகையை பறித்துச் சென்ற இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5783 total views