முட்டாள் சீக்கிரம் விஷத்தை குடுடா! நான் சாகனும்.... மேதையின் கடைசி தருணம்

Report
22Shares

நகரத்தின் சிந்தனைவாதி சாக்ரடீஸ் தன் கடைசி நிமிடத்தில், சாகும் தருணத்தில் கூட, சிறைச்சாலையில் அமர்ந்து கொண்டு நேரத்தை வீணாக்காமல் தனது நண்பர்களுடன் இறப்பு, ஆன்மா, வலி, இன்பம், துன்பம் போன்ற பகுத்தறியும் விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததாக ப்ளேட்டோ (சாக்ரடீஸின் பிரதம சீடர்) தனது Great Dialogues புத்தகத்தில் உணர்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.

விஷம் அருந்தும் சற்று நேரத்துக்கு முன், அவரைப் பிணைத்திருந்த சங்கிலிகள் அவிழ்க்கப்பட்டதால, தன் கால்களை தேய்த்துவிட்டுக் கொண்டு சற்று சவுகரியமாக மேடையில் அமர்ந்து கொண்டு ஆன்மாவுக்கு மரணமுண்டா, மறு பிறவு என்பது இருக்கிறதா? என்று தத்துவ விசாரணைகளில் தனது சீடர்களுடன் ஈடுபட்டாராம்.

இடிந்துபோய் அமர்ந்திருந்த சீடர்களோ அவரிடம் நுணுக்கமாக கேள்வி ஏதும் கேட்க முடியாமல் தவித்தனராம்.

சாகும் தருவாயில்கூட சீரிய பகுத்தறிவுத்தனம் என்பதன் உச்சத்தை சாக்ரடீஸிடம் நாம் பார்க்க முடிகிறது.

அவரின் கடைசி நிமிடத்தில் சிறையதிகாரி அவரிடம் வந்து, என்னை மன்னித்து விடுங்கள் சாக்ரடீஸ், இந்த சிறைக்குள் நான் பார்த்த எத்தனையோ கைதிகளுள் நீங்கள் மிகச் சிறந்த மனிதர் என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது!

வேறு ஏதும் என்னால் சொல்ல முடியவில்லை. என் மீது உங்களுக்கு கோபம் ஏதும் இல்லையே? என்று குரல் உடைந்து அழுதார்.

எழுந்து அவரிடம் சென்று அவரை அணைத்தவாறே பழுத்த சிந்தனையாளரும், பகுத்தறிவுவாதியுமான சாக்ரடீஸ் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?.

எனக்கு விஷம் தயாராக இருக்கிறதா? சீக்கிரம் கொடு முட்டாள் நண்பனே..என்றார்.

அவருடைய முதன்மை சீடர் க்ரீட்டோ கண்ணில் நீர்வழிய, அவசரமில்லை சாக்ரடீஸ், இன்னும் அஸ்தமனம் கூட ஆகவில்லை.

சட்டப்படி நள்ளிரவு வரை நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்றார் பதற்றமாக.

நான் கடைசிவரை ஆர்வத்துடன் உயிரைப் பாதுகாத்துக் கொண்டதை வரலாறு பதிவு செய்ய வேண்டுமா க்ரீட்டோ? அது சற்று முட்டாள்தனமாகத் தோற்றமளிக்காதா? என்று கூறிவிட்டு உடனே விஷக் கோப்பையை கொண்டுவரச் சொன்னாராம். தன் மரணம் பற்றி எவ்வளவு துல்லியமான, தெளிவான அறிவு அவருக்கு இருந்திருந்தால் மரணம் எனும் வாழ்வின் ஒருமுறை நிகழ்வுக்கு அவ்வளவு தயாராய் இருந்திருப்பார்?.

தன் மரணம் - நிச்சயமான ஒன்று என்கிற அறிவு, அதிகார வர்க்கம் அவருக்கு அளித்திருந்த தண்டணையே சாவு என்கிற பகுத்துப் பார்க்கிற அறிவு, அவருக்கு இருந்ததால்தான் அவரால் மரணம் என்பது ஒரு வாழ்வின் (கடைசி) நிகழ்வு என்கிற சாவகாசத் தன்மையோடு அமைதி காக்க முடிந்திருக்கிறது.

அது மட்டுமல்ல! விஷத்தை அருந்திய சாக்ரடீஸ், அது முறையாக வேலை செய்ய நான் ஏதாவது செய்ய வேண்டுமா? என்று அதிகாரியிடம் கேட்டிருககிறார்.

பின்னர் அதிகாரி சொன்னபடி விஷத்தை குடித்துவிட்டு கால்கள் மரத்துப் போகும்வரை சற்று முன்னும் பின்னும் நடந்தார். அதுவரை சோகத்தை அடக்கி வைத்துக் கொண்டிருந்த சீடர்கள் ஓவென்று கதற, என்ன இது? மரணத்தின்போது அமைதி நிலவுவது அழகாக இருக்குமே!’ என்றாராம்.

என்ன ஒரு மனிதர்? என்று பிரமிக்கத் தோன்றுகிறதல்லவா?

அதனால்தானோ என்னவோ அவர் இறந்த பிறகு நாமெல்லாம் சொல்வதுமாதிரி, அவர் இறந்துவிட்டார் என்றோ, பரலோக ப்ராப்தி அடைந்தார் என்றோ, இறைவனடி சேர்ந்தார் என்றோ சொல்லாமல், அவரது மரணத்தை சாக்ரடீஸ் இன்றுமுதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார் என்று அவரது சீடர்கள் அறிவித்தனர்.

ஏதென்ஸ் நகரமே களையிழந்து போனதாக வரலாற்றின் பக்கங்களில் பதிவு இருக்கிறது…!!!