இங்கு ஆவிகளின் அட்டகாசம் இருக்கிறது: உண்மைச்சம்பவம்!

Report
957Shares

1987 ம் ஆண்டு உப்புக்காற்று உரசிச்செல்லும் புங்குடுதீவில் அந்த வீட்டில் இனம்புரியாத அமானுஷ்யங்கள் நடமாடிக்கொண்டிருந்தன…. வீட்டிலிருந்தவர்களின் முகங்கள் இருண்டுபோயிருந்தன. அவர்களது உடல்கள் பயத்தால் உறைந்து போயின… என்ன காரணம்?… ஆவிகளின் அட்டகாசம் அவர்களது வீட்டில் ஆரம்பமாகியிருந்தது.

திடீர் திடீரென்று கல்மழை அவர்கள் வீட்டில் பொழியத்தொடங்கியது. வீட்டுக்கூரை மீதும் வீட்டின் உள்ளேயும் கற்கள் வந்து விழத்தொடங்கின. அந்த வீட்டுக்கு சொந்தக்காரி கதவைத்திறந்து வெளியேவந்து ”யாரது?” என்று குரல் கொடுத்துப்பார்த்தாள். கல்மழை அதிகரித்ததே தவிர யாரும் இருப்பதற்கான அடையாளத்தை காணவில்லை. தென்னைமரவட்டிலிருந்து எரிந்து கறுத்துப்போன கற்கள் வந்து விழுந்தன. பதிலுக்கு அவளும் ஒரு கல்லை எடுத்து தென்னை மரத்தை நோக்கி எறிந்து பார்த்தாள். சடசடவென கற்கள் அவளைநோக்கி எறியப்பட்டன. பயத்தால் ஓவென கத்தியபடி வீட்டுக்குள் புகுந்து கொண்டாள்.வீட்டிற்கு முன்னாலிருந்த அவர்களது கடையில் வீட்டு உரிமையாளர் பொருட்களை எடை போட்டவண்ணம் நின்றுகொண்டிருந்தார். கற்கள் அவரது தராசுத்தட்டிலும் வந்து விழுந்தன.

ஆறே மாதமான ஆண்குழந்தையும் இரண்டரை வயதுள்ள பெண்குழந்தையையும் வைத்துக்கொண்டு அவர்களால் எதையும் செய்யமுடியாமல் தத்தளித்தார்கள்.

தகவல் உறவினர்களுக்கிடையிலும் சுற்றத்தாருக்கிடையிலும் காட்டுத்தீயாய் பரவியது. ஊரெங்கும் ”எறிமாடனை ஏவிவிட்டுட்டாங்கள்” என்ற கதையாய் இருந்தது. அனைவரது சந்தேகக்கண்களும் பின் வீட்டில் குடியிருந்த கிழவனின்மேல்தான் படிந்தது. அந்தக்கிழவனுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் கடையில் கடன் வாங்கியது தொடர்பாக தீராத பிணக்கு இருந்ததென்னவோ உண்மைதான். அந்தக்கிழவனுக்கு மந்திர தந்திரங்களில் திறமை இருப்பதாகவும் அவனது உறவினர்கள் மட்டக்களப்பில் பிரசித்தமான மந்திரவாதிகள் என்றும் வதந்திகள் பரவின. ஆனால் நேரடியாக எதுவும் செய்யமுடியாத நிலை.

உள்ளூர் மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டனர். ஏதேதோ மந்திரங்களை உச்சரித்தவண்ணம் வீட்டை சுற்றிவந்தார்கள். எலுமிச்சம்பழங்களை உருட்டிவிட்டார்கள். போதுமான அளவுக்கு பணத்தையும் கறந்துகொண்டார்களே தவிர பலன் எதுவும் இல்லை.

மேலும் மேலும் கல்லெறி அதிகமானதேயொழிய குறையவில்லை. திடீரென்று முற்றத்தில்நின்ற கார் கண்ணாடியின்மீது பாதிச்செங்கல் அளவுள்ள கல்லொன்று வந்து விழுத்தது ஆனால் கார்க்கண்ணாடி உடையவேயில்லை. வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த கைக்குழந்தையின் மார்பிலும் கற்கள் வந்து விழுந்தன ஆனால் குழந்தையின் தூக்கம் கலையவில்லை. தாய் குழந்தையை மடியில் வளர்த்தியவண்ணம் கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்யத்தொடங்கினாள் மனதிற்கு ஒரு ஆறுதலைத்தந்த கந்தசஷ்டி கவசம் பிரச்சினைக்கு தீர்வைத்தரவில்லை. விடயம் முல்லைத்தீவிலிருந்த தாயின்சகோதரிக்கு தெரிவிக்கப்பட்டது.

அங்கிருந்த ஒரு மாந்திரிகரின் உதவியை நாடிய சகோதரிக்கு நாடிநரம்பையெல்லாம் ஒடுக்கும் செய்திதான் கிடைத்தது. அவர் வெற்றிலையில் மையை தடவி குறி சொல்ல ஆரம்பித்தார்.

உனது பிறந்தகத்தில் மாட்டுத்தொழுவத்தில் ஒரு கருப்பு நிறப்பசு கட்டப்பட்டுள்ளது.

ஆமாம் கருப்பு நிற கன்று

அடுப்பில் பானையில் பால் கொதித்துக்கொண்டிருக்கிறது….முற்றத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க தடித்த ஒரு ஆள் கிடுகு பின்னிக்கொண்டிருக்கிறார்…..சரியா

இருக்கலாம்..அவர்தான் என் அப்பா……. தங்கைச்சியின் வீட்டுப்பிரச்சினை…..

இருக்குது….அங்க உண்மையிலேயே ஆவிகளின் தொல்லை இருக்குது. கவனமாயிருக்க வேண்டும் பிள்ளைகளை கிணற்றுக்குள் தூக்கிப்போடும் அளவிற்கு அவற்றின் தொல்லை அதிகரிக்கும்.

ஆனால் தொலைதுரம் என்பதால் வீட்டிற்கு வந்து பிரச்சினையை தீர்த்துவைக்க அவர் மறுத்து விட்டார். கடைசி நம்பிக்கையும் மறைந்து போனது. உடனடியாக புங்குடுதீவுக்கு பயணமானாள் சகோதரி.

அவள் புங்குடுதீவை அடைந்தபோது நேரம் மாலை ஆறு மணி. தங்கையின் கடையில் வேலைபார்த்துக்கொண்டிருந்த இளைஞன் ஆவேசம் வந்து ஆடத்தொடங்கினான். வீட்டில் அங்கங்கு நிலத்தை கிளறி படையல், கழிப்பு செய்த பொருட்களை எடுக்கத்தொடங்கினான்.

பிரச்சினை கையை மீறிப்போவதை உணர்ந்த அவர்கள் மறுநாள் அவர்கள் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மனின் அருளாசி பெற்ற அருட்கவி விநாசித்தம்பி ஐயாவை சந்திக்க பயணமானார்கள். விநாசித்தம்பி ஐயா கடையில் வேலைசெய்து கொண்டிருந்த இளைஞனை வீட்டைவிட்டு அனுப்பச்சொல்லி இருவிதமான திருநீறை மந்திரித்து கொடுத்து ஒன்றை குடும்பத்தவர்கள் அனைவரும் தரித்துக்கொள்ளுமாறும் மற்றையதை கரைத்து வீட்டைச்சுற்றி தெளிக்குமாறும் கொடுத்தார்.

அவர் மந்திரித்துகொடுத்த திருநீறும் அம்மனுக்கு மாலையாக அணிவிக்க கொடுத்த எலுமிச்சம்பழங்களும் ஒரேநாளில் ஆவிகளின் கொட்டத்தை அடக்கின. ஏவலை யார் செய்தார்கள் என்று அவர் சொல்ல மறுத்துவிட்டார். எதுவாக இருந்தால் என்ன அதன்பின்னர் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் அந்தக்குடும்பம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவருகிறது.

28720 total views