வாரத்திற்கு இரண்டரை லட்சம் சம்பாதிக்கும் முதியவர்... சமையலினால் கொட்டும் பணமழை!

Report
2162Shares

பேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் நேரத்தை நாம் வீணாகச் செலவழித்துக்கொண்டிருக்க, டெக்னாலஜியை முறையாகப் பயன்படுத்திய 60 வயதுடைய ஆறுமுகம், பண மழையில் குளித்துக்கொண்டிருக்கிறார். அண்மைக்காலங்களில் ஃபேஸ்புக்கில் விதவிதமாக உணவு சமைக்கும் வீடியோக்கள் அடிக்கடி தென்படுவதைப் பார்த்திருப்போம். `வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி' என்ற பெயரில் யூடியூப் சேனலைத் தொடங்கிய ஆறுமுகம், ஆறே மாதங்களில் ஆறரை லட்சம் ரூபாய் சம்பாதித்திருக்கிறார்.

திருப்பூரைச் சேர்ந்த ஆறுமுகம், அசைவம் சமைப்பதில் கில்லாடி. கைப்பக்குவத்துடன் விதவிதமாக ருசியாகச் சமைப்பார். ஆறுமுகத்தின் மகன் கோபிநாத், சில தமிழ் சினிமாக்களில் பணியாற்றியிருக்கிறார்.

தந்தையின் சமையல் திறமை, கோபிநாத்தை சற்று சிந்திக்க வைத்தது. தன் தந்தையின் சமையல் கலையை உலகம் முழுக்கக் கொண்டுசேர்க்க முடிவுசெய்தார். 26 வயதே நிரம்பிய கோபிநாத்தின் சிந்தையில் உருவானதுதான் வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி. முழு ஆட்டை அப்படியே அவித்து சமைப்பதும் 300 முட்டைகளை வைத்து முட்டை கிரேவி சமையல் செய்த வீடியோவும் செம வைரல்.

ஆறுமுகத்தின் சமையல் வீடியோக்கள் இந்த அளவுக்குப் பிரபலமடைய காரணமும் இருக்கிறது. தமிழக சமையல்களில் அரேபிய ஸ்டைலில் முழு கிடாவை அப்படியே அவிக்கும் பழக்கம் இல்லை. அப்படிச் சமைக்கவும் பலருக்குத் தெரியாது. ஆறுமுகம் முழு ஆட்டுக்கிடாவை அவித்து, சமையல் செய்வது வித்தியாசமாக இருப்பதுடன் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

கிராமத்துப் பின்னணியில் பச்சைப் பசேலென்ற இடத்தில் சமையல் செய்வதும் அதே இடத்தில் வாழை இலையில் ஆறுமுகம் சாப்பிடுவதும்கூட ரசிக்கவைக்கிறது. மாட்டிறைச்சி சுக்கா, இறால் ஃப்ரை, குடல் கறி, வாத்துக்கறி, நாட்டுக்கோழிக் கறி என இவர் சமைக்கும்விதமே நாக்கில் எச்சில் ஊறவைத்துவிடுகிறது.

ஆபீஸில் மீட்டிங் போட்டு, `இன்றைக்கு என்ன செய்யலாம்?' என விவாதிப்பதுபோல, ஆறுமுகத்தின் குடும்பம் இன்றைக்கு என்ன உணவு சமைக்கலாம், எப்படிச் சமைக்கலாம் என விதவிதமாகச் சிந்திக்கிறது. வாரத்துக்கு ஒரு வீடியோவை யூடியூபில் அப்லோடு செய்கின்றனர். யூடியூப் சேனல் தொடங்கிய முதல் மாதத்தில் 8,000 ரூபாய்தான் வருவாயாகக் கிடைத்திருக்கிறது. அடுத்த மாதம் 45 ஆயிரம் ரூபாய். அதற்கு அடுத்த மாதத்தில் வருவாய் ஒரு லட்சம் ரூபாயாக உயர, ஆடிப்போனார் ஆறுமுகம். `நம்மளே சமைச்சு நம்மளே சாப்பிடுறதுக்கு எங்கிருந்தோ பணம் கொட்டுகிறதே' என வியந்தும்போனார். மகனின் அறிவை நினைத்து மெச்சினார்.

ஒரு மாதத்தில் 3.10 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைத்திருக்கிறது. தற்போது, எட்டு நாள்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வருவாயாகக் கிடைக்கிறது. ஆறுமுகத்தின் சகோதரர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள். இவர் மட்டுமே பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தார். கூகுள் அட்சென்ஸிலிருந்து பணம் கொட்ட, இப்போது ஆறுமுகமும் அம்பானி ஆகிவிட்டார். தான் ஒரு யூடியூப் செலிபிரட்டி என்றெல்லாம் ஆறுமுகத்துக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் சமையல் மட்டும்தான்.

ஆறுமுகத்தின் மகன் கோபிநாத் கூறுகையில், ``சில சினிமாக்களில் பணியாற்றினேன். அந்தப் படங்கள் வெளியாகவில்லை. வாழ்க்கையே போராட்டமாகிப்போனது. திருப்பூரில் கேபிள் ஆபரேட்டராகப் பணிபுரிந்தபோது, வீடியோ எட்டிட்டிங் படித்தேன். சென்னையில் பணிபுரியும்போதுதான், யூடியூப்பில் வீடியோக்கள் அப்லோடு செய்வதும் அதன் வழியாகப் பணம் சம்பாதிப்பதும் தெரியவந்தது. தந்தைக்காக யூடியூப் சேனல் தொடங்க வேண்டும் என முடிவெடுத்தேன். தந்தையின் சமையல் திறமையை உலகறிய வைக்க விரும்பினேன். எந்தப் பணியிலுமே கஷ்டப்பட்டால்தான் வெற்றிபெற முடியும். இதிலும் அப்படித்தான். விதவிதமாகச் சிந்திக்க வேண்டும். வீடியோ ஷூட்டிங் செய்யக்கூடிய இடங்கள் தேர்வுசெய்வது சவால் நிறைந்தது. பெரும்பாலும் அழகான தனியார் பண்ணைத் தோட்டங்களில் அனுமதி வாங்கி வீடியோ எடுப்போம். யூடியூப்பில் ஆயிரம் வீடியோக்கள் பதிவேற்றுவது எங்கள் லட்சியம்'' என்கிறார்.

கிடாக்கறி, மாட்டுக்கறி, பொரித்த மீன்களை ஆறுமுகம் வெட்டுவதைப் பார்த்துவிட்டு ``இந்த வயதிலும் இப்படிச் சாப்பிடுகிறாரே... உடலுக்கு எதுவும் செய்துவிடாதா... உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள்'' என அன்புமழைப் பொழிகிறார்கள் பார்வையாளர்கள். டெக்னாலஜியைப் பொழுதுபோக்காகப் பார்க்காமல் புத்திசாலித்தனமாகப் பார்த்தால் அதுவும் பணம் கொழிக்கும் பிசினஸ்தான்!

69195 total views