போலி பே.டி.எம் மூலம் கல்லூரி மாணவர்கள் ஏமாற்றிய செயல்... மளிகைக் கடைக்காரரிடம் மூன்று லட்சம் மோசடி!

Report
42Shares

சென்னை துரைப்பாக்கத்திலுள்ள மளிகைக்கடை ஒன்றில் போலி PAY TM செயலியைப் பயன்படுத்தி 3 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் மற்றொரு மோசடி முகம்....

இப்போது எல்லாம் எங்கு பார்த்தாலும் மக்கள் பெரும்பாலும் பணம் செலுத்துவதற்கு தனது ஏ.டி.ம் டேபிட் கார்டுகளையும், பல எண்ணற்ற வாலட்கள் ஆப் மூலமாகவும் பணபரிமாற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதனால் டிஜிட்டல் முறையில் பணபரிமாற்றம் செய்வதால் பல சிக்கல்களும் ஏற்படுகிறது.

சில சிக்கலான இந்த வழிமுறைகளை கொண்ட இந்த டிஜிட்டல் பரிவர்தணை மூலம் பல மோசடிகளும் நடந்து கொண்டு தான் வருகிறது. அப்படி ஒரு மோசடி செயல் தான் இங்கும் அரங்கேறியுள்ளது.

சென்னை ராஜிவ்காந்தி சாலை துரைப்பாக்கம் குமரன் குடில் நகரில் சரவணன் என்ற வேல்ராஜ் தனது வீட்டின் கீழ் தளத்தில் சரவணா ஷாப்பிங் மால் என்னும் பெயரில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் உள்ள அமிர்தா ஹோட்டல் மேனஜ்மென்ட் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இவரது கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு PAYTM APP மூலமாக பணம் செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படாததை கண்டு அதிர்ச்சியடைந்த சரவணன், வங்கி மற்றும் PAYTM APP ஊழியர்களிடம் விசாரித்துவிட்டு இறுதியில் மாணவர்களிடம் விசாரித்துள்ளார்.

அவர்களில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்டெல்லி மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிரண் ஆகிய மாணவர்கள் பணம் செலுத்தியது போலி PAYTM APP என்பது தெரியவந்தது. நமது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்போது வங்கித் தரப்பில் இருந்து வரும் குறுஞ்செய்தி சயமங்களில் தாமதமாகும். இதை சாதகமாக்கிக் கொண்டுதான் அந்த மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

போலி ஆப் மோசடி

PAYTM APP போலவே SPOOF PAYTM என்ற செயலியை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் வழக்கமான நடைமுறையில் கடையின் QR Codeஐ ஸ்கேன் செய்து தொகையை உள்ளீடு செய்தபின், பணம் செலுத்தியதுபோல் டிக் மார்க் வந்துள்ளது. அந்த டிக் மார்க்கை பார்த்ததும் பணம் செலுத்தியதாக எண்ணிய சரவணன் வங்கி குறுஞ்செய்தி தாமதமாக வரும் என்று விட்டிருக்கிறார்.

மேலும் போலி PAYTM ஆப் மூலமாக கடந்த மூன்று மாதங்களில் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் வரை இந்த மாணவர்கள் மோசடி செய்துள்ளதாகக் கூறுகிறார் சரவணன். சம்பவம் குறித்து துரைபாக்கம் காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்துள்ளார்.

இதுபோன்ற பணப்பரிவர்த்தனைகளின்போது வாடிக்கையாளர் கடையில் இருந்து வெளியே செல்வதற்கு முன் வங்கித் தரப்பில் இருந்து குறுஞ்செய்தி வந்துவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

2575 total views