பிக்பாஸில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி: கமலின் இன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகுமா?

Report
2482Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேலை செய்யும் ஏசி மெக்கானிக் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் மூன்று வாரத்தில் இந்த நிகழ்ச்சி முடிந்துவிடும் என்பதால் போட்டியாளர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

சென்னை அடுத்த பூந்தமல்லி செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் ’பிக்பாஸ்2’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் இரவும் பகலுமாக அங்கு தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில் அரியலூர் மாவட்டம் மாத்தூரை சேர்ந்த குணசேகரன்(30), என்பவர் பிக்பாஸ் செட்டில் தங்கி ஏசி மெக்கானிகாக வேலை செய்து வந்துள்ளார்.

நேற்று இரவு இவர் தான் தங்கியுள்ள அறையின் இரண்டாவது மாடிக்கு சென்று சாப்பிட்டு விட்டு கை கழுவ சென்றுள்ளார். அப்போது 2 வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் குணசேகரனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் உயிரிழந்தார். இதுகுறித்து நசரத்பேட்டை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், குணசேகரன் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் இன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சியினை பிரபல ரிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதனால் இன்றைய நிகழ்ச்சி எந்தவொரு தடையின்றி நிகழும் என்று உறுதியாகியுள்ளது.

86635 total views