சூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய்! அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்?

Report
1760Shares

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தவறான ரத்தம் செலுத்தியதால் தன்னுடைய 80 சதவிகித கல்லீரல் பாதிக்கப்பட்டு விட்டதாகவும், 20 சதவிகித கல்லீரலுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அத்துடன் தான் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தும் 8 ஆண்டுகள் கழித்தே தெரியவந்ததாகவும், முறையான பரிசோதகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டுரையில் காசநோய் என்பது என்ன? அதன் அறிகுறிகள்? மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி பார்க்கலாம்.

காசநோய்

Mycobacterium tuberculosis எனும் நுண்கிருமியால் காசநோய் வருகிறது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் கொடூர நோய்களில் இதுவும் ஒன்று, இதை பொதுவாக TB என அழைக்கிறோம், TB என்பது `Tubercle bacillus’ அல்லது `Tuberculosis’ என்பதன் சுருக்கமே.

மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கின்ற இருமல், சளி, காய்ச்சல், சளியில் ரத்தம், பசியின்மை, உடல் எடை குறைவது, டல் எடை அதிகரிக்காமல் இருப்பது, களைப்பு மற்றும் சுவாசிக்க சிரமப்படுதல்

நோயாளியின் நுரையீரலில் காசநோய் கிருமிகள் வசிக்கின்றன, அவர் தும்மினாலோ, இருமினாலோ, மூக்கை சிந்தினாலோ, சளியை காறித் துப்பினாலோ கிருமிகள் பரவும்.

மூக்கு மற்றும் வாய் பகுதிகளில் நோய் கிருமிகள் இருப்பதால், நோயாளி அதை தொட்டுவிட்டு மற்றவரை தொட்டாலும் எளிதில் பரவிவிடும்.

இதுதவிர நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் நோய் எளிதாகப் பரவிவிடும். நோயாளி பேசும்போதுகூட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

யாருக்கெல்லாம் வரும்

புகை பிடிப்பவர்கள், ஊட்டசத்துக் குறைவு உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், வறுமையில் வாடும் ஏழைகள், அறியாமையில் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், காசநோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகுபவர்கள் ஆகியோரை இந்த நோய் அதிகமாகப் பாதிக்கிறது.

எதையெல்லாம் தாக்கும்- கண்டறிவது எப்படி?

முடி, நகத்தைத் தாக்காது. காசநோய் கிருமிகள் நுரையீரல், நுரையீரல் உறை, குடல், குரல்வளை, எலும்பு, முதுகுத் தண்டுவடம், சிறுநீரகம், கண், தோல், மூளை, மூளை உறை, விந்துக்குழல், கருப்பை இணைப்புக் குழல், நிணநீர்ச் சுரப்பிகள் என்று பல உறுப்புகளைப் பாதிக்கின்றன.

காசநோய் முற்றிய நிலையில், இருமலில் ரத்தம் கடுமையாக வெளியேறி மரணம் நிகழலாம். நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு, சுவாசிக்க முடியாமல் மரணம் நேரலாம். நோய் மூளை போன்ற மற்ற உறுப்புகளில் பரவி மரணம் நிகழலாம். மூளைக்காய்ச்சல் வந்து மரணம் நிகழலாம். காசநோயுடன் எய்ட்ஸ் நோய் வந்து மரணம் நிகழலாம்.

ஒருவருக்குக் காசநோய் சிகிச்சை ஆரம்பித்ததும், சளிப் பரிசோதனைகள் மூலம் நோய்க் கிருமிகள் குறைவது உறுதிசெய்யப்படும்.

நோய்க் கிருமி குறையாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், எம்.டி.ஆர் காசநோய் பரிசோதனைகள் செய்யப்படும்.

பரிசோதனையின்போது காசநோய்க் கிருமிகள் இல்லை என்றால், எக்ஸ்-ரே, CBNAAT பரிசோதனைகளின் மூலமாகக் காசநோய்க் கிருமிகள் இல்லை என்பதை உறுதிசெய்வார்கள்.

நுரையீரல் தவிர உடலின் மற்ற பாகங்களில் வரும் காசநோய்களுக்கு, அதற்கேற்றபடி பரிசோதனைகள் செய்யப்படும், குறைந்தது ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் குணப்படுத்தி விடலாம்.

இந்த சிகிச்சையை முழுமையாக மேற்கொள்ளாமல் இடையில் விட்டுவிட்டால், இந்த நோய் எம்.டி.ஆர் காசநோயாக (MDR TB) மாறவும் வாய்ப்புள்ளது.

எம்.டி.ஆர் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (Multi Drug Resistant Tuberculosis - MDR TB) INH மற்றும் Rifampicin போன்ற மருந்துகளால் நோயைக் கட்டுப்படுத்த முடியாது. அதேபோல மற்ற காசநோய் சிகிச்சை மருந்துகளுக்கு இது கட்டுப்படவோ, கட்டுப்படாமல் போகவும் வாய்ப்புள்ளது.

எம்.டி.ஆர் காசநோய்க்கான சிகிச்சை காலம் இரண்டு ஆண்டுகள். தீவிர சிகிச்சை காலம் ஆறு முதல் ஒன்பது மாதங்கள், தொடர் சிகிச்சை காலம் 18 மாதங்கள்.

எம்.டி.ஆர் காசநோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ளும்போது காசநோய்க் கிருமி குறைந்திருக்கிறதா என்பது, சாலிட் கல்ச்சர் சோதனையின் (Solid Culture- நுண்ணுயிர் வளர்ப்பு சோதனை) மூலம் உறுதி செய்யப்படும்.

தடுக்க என்ன செய்யலாம்?
  • காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களைப் பரிசோதனை செய்து, அவர்களுக்குக் காசநோய் இருந்தால் முறையான, முழுமையான சிகிச்சை பெற வேண்டும்.
  • கண்ட இடங்களில் எச்சில் துப்பக் கூடாது, இருமல், தும்மல் வந்தால் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
  • குழந்தைகளுக்கு பிசிஜி தடுப்பூசி போட வேண்டும்.
52943 total views
loading...