2020 இல் யார் யார் எந்த கடவுளை வணங்கினால் ராஜயோகம் தெரியுமா?

Report
205Shares

பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களுக்குள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு ராசிக்கும் ராசி அதிபதி, அந்த ராசிக்குள் இருக்கும் நட்சத்திரங்களுக்கு அதிபதி என்று தெய்வங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இந்த அடிப்படையில் பன்னிரண்டு ராசிகளைச் சேர்ந்தவர்களும், தத்தமது ராசிக்கு உகந்த தெய்வங்களை வழிபட்டு 2020 இல் வரம் பெற்று மகிழலாம்.

மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். ராசி அதிபதிக்குரிய தெய்வம் முருகப்பெருமான். ஆக, இந்த ராசிக்காரர்கள் செவ்வாய் பகவானையும் முருகப்பெருமானையும் வழிபடலாம்.

பிரதோஷ காலத்தில் நந்திதேவருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, சிவப்பரிசியும் வெல்லமும் கலந்த காப்பரிசி நைவேத்தியம் செய்தும் வழிபடலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். ராசி அதிபதிக்குரிய தெய்வம் மகாலட்சுமி. எனவே, மகாலட்சுமியை வழிபடுவதால் சுக்ரயோகம் உண்டாகும்.

வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்கு பூஜை செய்து வழிபடுங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்கு அதிபதி புதன். உரிய தெய்வம் விஷ்ணு. மிதுன ராசியில் பிறந்தவர்கள் புதன்கிழமைகளில் புதனுக்கு பச்சை வஸ்திரம், மருக்கொழுந்து மாலை சாத்தி, பச்சைப்பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

புதன்கிழமைகளில் மகா விஷ்ணுவுக்குத் துளசி மாலை அணிவித்து, பாசிப்பருப்பு பாயசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரன். சந்திரனுக்குரிய தெய்வம் அம்பிகை. இந்த ராசிக்காரர்கள் சந்திரனுக்கு வெண்பட்டு, கற்கண்டு சாதம் சமர்ப்பித்து வழிபடுவதுடன், திங்கட்கிழமைகளில் அம்பிகைக்குக் குங்குமார்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சிவனாரையும், ராசியாதிபதியான சூரியனையும் வழிபடுவதால் விசேஷ பலன்கள் உண்டாகும். இவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவானுக்கு ஆரஞ்சு நிற வஸ்திரம் அணிவித்து, செம்பருத்தி மலர்களால் அர்ச்சனையும், கோதுமை ரவையுடன் பாலும் சர்க்கரையும் கலந்து செய்த பாயசம் நைவேத்தியமும் செய்து வழிபடலாம். அஷ்டமி அன்று கால பைரவரை வழிபடுவது மிகவும் விசேஷம்.

கன்னி

கன்னி ராசியின் அதிபதி புதன். புதனுக்குரிய தெய்வம் மகாவிஷ்ணு. கன்னி ராசியில் பிறந்தவர்கள், புதன் பகவானுக்கு மருக்கொழுந்தால் அர்ச்சனை செய்து, பச்சைப் பயறு பாயசம் நைவேத்தியம் செய்தும், விஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவித்தும் வழிபடுவது விசேஷம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள், வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனுக்கு முல்லை மலர் அணிவித்தும், கஜலட்சுமிக்குச் செந்தாமரை மலரால் அர்ச்சனை செய்தும் வழிபட்டால் நன்மைகள் பெருகும். இந்த ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், செவ்வாய் பகவானுக்குச் செவ்வரளி மாலை அணிவித்து, துவரம்பருப்பு சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை வழிபடுவதும் நலம் சேர்க்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானை வழிபடுவதுடன், செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் இணைந்து வரும் நாளில் சண்முகருக்குப் பாலாபிஷேகம் செய்து, பஞ்சாமிர்தம் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, மஞ்சள் சாமந்தியால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது. பிரம்மதேவருக்கு மஞ்சள் காப்பு சாத்தி, பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்லது.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் மகா கணபதிக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, மோதகமும், சுண்டலும் நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்லது. நவகிரகங்களில் சனி பகவானுக்குக் கறுப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நீல நிற மலர்களால் அர்ச்சனை செய்து, எள்ளன்னம் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்கள் உக்கிரமா இருக்கும் சனியை வணங்கினால் அதிர்ஷ்டம். சனிக்கிழமைகளில் நவகிரகங்களில் சனி பகவானுக்கு கருநீல வஸ்திரம் அணிவித்து, நீலநிற மலர்களால் அர்ச்சனை செய்து, எள் சேர்த்த தயிரன்னம் நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்லது.

மேலும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தி, வடை மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடலாம்.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்கள், வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு மஞ்சள் சாமந்தி மாலையைச் சமர்ப்பித்து வழிபடுவதுடன், பிரம்ம தேவருக்கு மஞ்சள் காப்பு சாத்தி, பொன்னிற மலர்களால் அர்ச்சனையும், பால் பொங்கல் நைவேத்தியமும் செய்து வழிபடுவது நன்மை தரும்.