2017 - 2019 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்... துலாம் முதல் மீனம் ராசி வரை ராஜயோகம் எப்படி இருக்கு?

Report
5141Shares

துலாம்

இனம், மொழி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் உதவுபவர்களே! உங்களுக்கு 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்குப் பதினோராம் வீட்டில் அமர்ந்து பிரபலங்களின் நட்பு, திடீர் பணவரவு, வாகன வசதி எனப் பல வகையிலும் முன்னேற்றம் தந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் புதிய முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். இந்த ராகு சுயமாகச் சிந்திக்க வைப்பதுடன், சுயமாகத் தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார்.

குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு,வாகன வசதி பெருகும். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருந்த நீங்கள், இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். தடைப்பட்ட கல்வியைத் தொடருவார்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய நண்பர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். என்றாலும் 10-ல் ராகு வருவதால் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்ப்பதால் இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற பதற்றம் இருந்து கொண்டேயிருக்கும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 4.4.2018 வரை புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். உறவினர்கள் மத்தியிலிருந்த கசப்புணர்வு நீங்கும். ஆனால், ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். ஒவ்வாமை, சிறுநீர்த் தொற்று, தூக்கமின்மை வரக்கூடும்.

5.4.2018 முதல் 10.12.2018 வரை சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். வீடு, மனை, வாகனம் புதிதாக வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புறநகர்ப் பகுதியில் வீட்டு மனை வாங்கியிருந்தால் நேரில் சென்று அவ்வப்போது கண்காணித்து வரவும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

11.12.2018 முதல் 13.2.2019 முடிய குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் ராகு பகவான் பயணிப்பதால் வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனத்தில் செல்லும்போது மறவாமல் தலைக்கவசம் அணிந்து செல்வது நல்லது. இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்தாலும் பாசம் குறையாது. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பிப் பெரிய காரியங்களில் இறங்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும்.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற அதிகம் உழைக்க வேண்டி வரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவது குறித்து யோசிப்பீர்கள். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகளைத் திருப்திபடுத்த முயல்வீர்கள். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்களைவிட அனுபவம் குறைந்தவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப்போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

கேதுவின் பலன்கள்

இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து முன்கோபத்தால் பிரிவு, உறவினர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகளையும் பல கசப்பான அனுபவங்களையும் தந்த கேது, இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் பதற்றத்திலிருந்து விடுபட வைப்பதுடன் பக்குவப்படுத்துவார். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் இனி நடக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

வீட்டுக்குத் தேவையான பிரிட்ஜ், ஏசி வாங்குவீர்கள். குலதெய்வக் கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், கேது 4-ல் வந்தமர்வதால் வீடு கட்டத் தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு, வீடு கட்டத் தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது, கவனம் தேவை. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளும் பயணச் செலவுகளும் அதிகரிக்கும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவீர்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும். ஆனால், மனைவிக்கு இரும்புச் சத்துக் குறைபாடு வந்து செல்லும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் கொஞ்சம் கவனமாகச் செயல்படுங்கள். சகோதரர்களுடன் வீண் விவாதங்கள் வரக்கூடும்.

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வேலை கிடைக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஷேர் லாபம் தரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அண்டை வீட்டாரைப் பகைத்துக்கொள்ளாதீர்கள்.

7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். மூத்த சகோதரர்களால் பலனடைவீர்கள். வீண் வதந்திகளும் வரத்தான் செய்யும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. வங்கிக் காசோலைகளைக் கவனமாகக் கையாளுங்கள்.

இந்த ராகு - கேது மாற்றம் உங்களுக்குள் உறங்கிக் கிடந்த திறமையை வெளிப்படுத்துவதுடன், வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தை அமைத்துத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: அஷ்டமி திதி நடைபெறும் நாட்களில் பைரவரை பூசணிக்காய் தீபம் அல்லது தேங்காய் தீபமேற்றி வணங்குங்கள். வேப்பமரக் கன்று நட்டுப் பராமரியுங்கள். தொட்டது துலங்கும்.

விருச்சிகம்

சிதறிக் கிடக்கும் சக்தியைத் திரட்டிச் சேர்ப்பதில் வல்லவர்களே! உங்களுக்கு 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களை ஒரு வேலையும் செய்யவிடாமல் முடக்கிப்போட்ட ராகு பகவான், இப்போது ஒன்பதாம் வீட்டில் வந்தமர்வதால் சோம்பல் நீங்கும். முடியாமல் கிடப்பில் கிடந்த பல காரியங்களை இனி முழுமூச்சுடன் முடித்துக்காட்டுவீர்கள். ஒளிந்து மறைந்து வாழ்ந்த வாழ்க்கை இனி பிரகாசிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். வீட்டில் ஒரு நல்லதுகூட நடக்காமல் தடைப்பட்டுக் கொண்டேயிருந்ததே, இனி சுபகாரியங்களால் வீடு களைகட்டும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும்.

தாம்பத்யம் இனிக்கும். வசதி, வாய்ப்புகள் நிறைய இருந்தும் வாரிசுகள் இல்லாமல் தவித்தீர்களே! இனி கண்ணுக்கு அழகான வாரிசு உண்டாகும். ஆனால், ராகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் தந்தையாருடன் கருத்து மோதல் வர வாய்ப்பிருக்கிறது. கனிவான பேச்சால் பிரச்சினைகளைத் தவிர்க்கப் பாருங்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். பாகப்பிரிவினை பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்க்கப் பாருங்கள். கோர்ட், கேஸ் என்று போக வேண்டாம். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 04.04.2018 வரை ராகு பகவான் செல்வதால் வெளிநாட்டில் வேலைக்கு முயன்றவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஆனால், நெருங்கியவராக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம்.

சனியின் பூசம் நட்சத்திரத்தில் 05.04.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் செல்வதால் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். ஆன்மிகப் பெரியவர்கள் உதவுவார்கள். ஆனால், நிலபுலன்கள் வாங்குவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.

குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 11.12.2018 முதல் 13.02.2019 முடிய ராகு பகவான் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். அரசால் ஆதாயம் உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை நல்ல விதத்தில் முடிவடையும்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் புது உத்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் வளைந்து கொடுத்துப் போவார்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். உத்தியோகத்தில் உங்களைத் தரக்குறைவாக நடத்திய மேலதிகாரி, வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். உங்களின் வெகுநாள் கனவான பதவியுயர்வு இனி உண்டு. வேலைச்சுமை குறையும். கலைத்துறையினரின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பேசப்படும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்துகொண்டு காரியத்தடை,மன உளைச்சல், தாயாருக்கு மருத்துவச் செலவு என உங்களைப் பலவகையிலும் அவஸ்தைப்படுத்திய கேது பகவான், இப்போது மூன்றாவது வீட்டிலே வந்தமர்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். சங்கடங்கள் தீரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கணவன் -மனைவிக்குள் அடிக்கடி சந்தேகப்பட்டுக்கொண்டீர்களே! இனி நெருக்கம் அதிகரிக்கும்.

சோம்பலாக இருந்த பிள்ளைகள் இனி சுறுசுறுப்படைவார்கள். உயர்கல்வியில் வெற்றிபெறுவார்கள். புலம்பிக்கொண்டிருந்த தாயார் இனி சிரிப்பார். அவருடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். ஆனால், இளைய சகோதர வகையில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து மறையும். கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 29.11.2017 வரை கேது பகவான் செல்வதால் உங்களின் தைரியம், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அலைச்சல்கள் வந்தாலும் நினைத்ததை முடிப்பீர்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் உண்டு.

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் பணவரவு அதிகரிக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். புது வேலை கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். ஆனால், தந்தையாரின் உடல்நிலை பாதிக்கப்படலாம். நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 07.08.2018 முதல் 13.02.2019 வரை கேது செல்வதால் செல்வாக்கு கூடும். உங்களின் நிர்வாகத் திறமை கூடும். வழக்கு சாதகமாகும். சொத்து சேரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை நீங்கும்.

இந்த ராகு - கேதுப் பெயர்ச்சி விரக்தி அடைந்திருந்த உங்களை, வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுடன் எங்கும் முதல் வரிசையில் அமர வைக்கும்.

பரிகாரம்: அஸ்வினி நட்சத்திரம் நடைபெறும் நாட்களில் முருகப் பெருமானை 9 நெய் தீபமேற்றி வணங்குங்கள். அத்தி மரக்கன்று நட்டுப் பராமரியுங்கள். வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

தனுசு

வளைந்துத் தாக்கும் கருவியான வில்லை ராசியாக கொண்டவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து கொண்டு வருமானத்திற்கு வழியே இல்லாமல் தடுமாற வைத்த ராகு பகவான் இப்பொழுது எட்டாம் வீட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால் அல்லல்பட்ட உங்கள் மனம், இனி அமைதியடையும். பாதியிலேயே தடைபட்டுப் போன வேலைகளையெல்லாம் இனி பரபரப்புடன் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் முகம் பளிச்சிடும்.

வீட்டில் தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் இனி சிறப்பாக நடக்கும். அடிக்கடி தந்தையாருடன் வீண் வாக்குவாதங்களும் மனக்கசப்புகளும் வந்துகொண்டிருந்ததே! அவரின் உடல்நிலையும் அவ்வப்போது பாதிக்கப்பட்டாதே, இனி அவரின் ஆரோக்யம் மேம்படும். அப்பா, மகனின் உறவு இனிக்கும். தந்தைவழி சொத்திலிருந்த சிக்கல்களெல்லாம் விலகி உங்கள் கைக்கு வந்துசேரும். ஆனால் எதிர்பாராத வகையில் செலவு மற்றும் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உறவினர்கள், நண்பர்களிடம் குடும்ப விஷயங்களை சொல்லி ஆறுதல் தேடாதீர்கள்.

மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறையாக நடந்துக் கொள்ளுங்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உணவு விஷயத்தில் முடிந்த வரையில் அசைவ, கார உணவு வகைகளை தவிர்த்துவிட்டு, காய்கறி, கீரை வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். வேற்றுமொழிப் பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 04.04.2018 வரை ராகுபகவான் செல்வதால் கணவன்- மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்துக் கொண்டே இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளப்பாருங்கள். தங்க ஆபரணங்களை இரவல் கொடுக்கவோ,வாங்கவோ வேண்டாம். மூத்த சகோதரர் உதவுவார்.

சனியின் பூசம் நட்சத்திரத்தில் 05.04.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் செல்வதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். தைரியமாக புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி தங்கும். ஆபரணங்கள் சேரும். புது வாகனம் வாங்குவீர்கள். இளைய சகோதரர் உதவுவார். வழக்கு சாதகமாகும். இடவசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 11.12.2018 முதல் 13.02.2019 முடிய ராகு பகவான் செல்வதால் சோர்ந்து கிடந்த உங்கள் முகம் மலரும். அழகு, ஆரோக்கியம் கூடும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பழைய வாகனத்தை மாற்றி, புது வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உங்கள் மகனுக்கு எதிர்பார்த்த கல்வி பிரிவில் இடம் கிடைக்கும்.

வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகளைப் போடாதீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். வேலையாட்களின் ஆதரவு உண்டு. என்றாலும் அவர்களைக் கண்காணிப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டுத்தானே இருந்தார்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் அடக்கு முறை மாறும். இனி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சலுகைகளுடன், பதவியும் உயரும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடுமளவிற்கு நெருக்கமாவீர்கள். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு மன தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கொடுத்து வந்த கேது பகவான், இப்போது ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைகிறார். சாதுர்யமான பேச்சால் சாதிக்கப் பாருங்கள். ஆனால் சில நேரங்களில் வீண் வம்பில் சிக்கிக் கொள்வீர்கள். பல் வலி, பார்வைக் கோளாறு வந்து நீங்கும். சேமிப்புகள் கரையும் அளவிற்கு அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும்.

மகனின் கல்யாணப் பேச்சுவார்த்தையிலிருந்த சிக்கல்கள் நீங்கித் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உங்களை சிலர் குறைத்து மதிப்பீடார்களே! இப்பொழுது அவர்கள் ஆச்சர்யப்படும்படி பல விதங்களில் சாதிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளப்பாருங்கள். வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். வறட்டு கவுரவத்திற்கும், போலிப் புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள். தேடிக்கொண்டிருந்த தொலைந்துப் போன பழைய ஆவணம் ஒன்று கிடைக்கும். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும். வாகனத்தை கவனமாக இயக்கப்பாருங்கள். தூக்கமின்மை, மன உளைச்சல் வந்துபோகும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 29.11.2017 வரை கேது பகவான் செல்வதால் மதிப்பு, மரியாதைக் கூடும். சொத்துப் பிரச்சினை தீரும். அரசால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. பழைய கடனைத் தீர்க்க புது உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அளிப்பார்கள். சகோதரர்கள் உதவுவார்கள்.

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியிட வேண்டாம். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை இரவல் தர வேண்டாம். பணப் பற்றாக்குறை நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. வேலைக் கிடைக்கும். வேற்று மதம், மொழியினரால் ஆதாயம் உண்டு. கூடாப் பழக்க வழக்கங்கள் இலவசமாக நுழையப் பார்க்கும். கவனமாக இருங்கள்.

07.08.2018 முதல் 13.02.2019 வரை கேது செல்வதால் வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். திருமணம் கூடி வரும். புதுமனைப் புகுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். பாகனப் பிரிவினை சுமுகமாகும்.

இந்த ராகு, கேது மாற்றம் புது அனுபவங்களை தருவதுடன், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொள்ள வைக்கும்.

பரிகாரம்: பஞ்சமி திதி நடைபெறும் நாட்களில் அல்லது வியாழக்கிழமைகளில் ஸ்ரீசத்ய சாய்பாபாவுக்கு மஞ்சள் நிறத் துணி தந்து வணங்குங்கள். தென்னை மரக்கன்று நட்டு பராமரியுங்கள். வீடு, மனை, உத்யோகம் அமையும்.

மகரம்

உலகில் திரும்பக் கிடைக்காத ஒரே சிம்மாசனம் தாயின் மடிதான் என்பதை அறிந்தவர்கள் நீங்கள்! உங்களுக்கு 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து நின்று காரியத்தடைகளையும் மன உளைச்சலையும் கொடுத்துவந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமர்கிறார். உங்களின் அறிவாற்றலை மழுங்க வைத்தவர், இப்போது உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரப் போகிறார்.

வீண் விவாதங்கள், அலைச்சல்கள், கோபதாபங்கள் எல்லாம் குறையும். கணவன், மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. என்றாலும் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் அமர்வதால் மனைவியுடன் வரும் சின்ன சின்னப் பிரச்சினைகள் பெரிதாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். எந்த விஷயமாக இருந்தாலும் சுயமாக யோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். குழந்தை பாக்கியம் உண்டு. நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். திடீர் பயணங்களுக்குக் குறையிருக்காது.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 04.04.2018 வரை ராகு பகவான் செல்வதால் தந்தையாரின் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். திடீர்ப் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

சனியின் பூசம் நட்சத்திரத்தில் 05.04.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் செல்வதால் உங்களின் அழகு, இளமை கூடும். சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். பணவரவு எதிர்பார்த்த வகையில் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரசால் ஆதாயம் உண்டு. நிர்வாகத் திறமை கூடும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 11.12.2018 முதல் 13.02.2019 முடிய ராகு பகவான் செல்வதால் இளைய சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகளைப் பற்றி யோசிப்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பழைய பாக்கிகள் கைக்கு வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் காரசாரமான விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கடையை அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம்.

இருக்கிற இடத்திலேயே தொடர்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரியின் போக்கை அறிந்து நடந்துகொள்வீர்கள். உங்களின் கடின உழைப்புக்கேற்றாற்போல் பதவி உயர்வும் அடைவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக்கூடப் போராடிப் பெற வேண்டி வரும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்று கொண்டு உங்களைப் பக்குவமில்லாமல் பேசவைத்த கேது பகவான், இப்போது உங்கள் ராசியிலேயே வந்தமருவதால் இனி சமயோஜிதப் புத்தியுடன் பேசவைப்பார். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாகச் சிந்தித்த நீங்கள் இனி ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளப் பாருங்கள். பிள்ளைகளின் வருங்காலத்தைக் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்து போகும்.

ராசிக்குள் கேது அமர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்ததையும் உட்கொள்ள வேண்டாம். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சாப்பாட்டில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள். யாருக்காகவும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். தன்னம்பிக்கை குறையும். முடிந்தவரை இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 29.11.2017 வரை கேது பகவான் செல்வதால் வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். மூத்த சகோதரர் வகையில் அலைச்சல்கள் வந்து போகும். இந்தக் காலக்கட்டத்தில் அவிட்டம் 1, 2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திரத்திலேயே கேது செல்வதால் சிறு சிறு விபத்து, தூக்கமின்மை வந்துபோகும். வீடு மனை வாங்குவதாக இருந் தால் தாய்ப் பத்திரத்தைச் சரிபார்ப்பது நல்லது.

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு உண்டு. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்காலக்கட்டத்தில் உங்களின் நட்சத்திரத்திலேயே கேது செல்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

07.08.2018 முதல் 13.02.2019 வரை கேது செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் தாமதமாகும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். ஆரோக்கியக் குறைவு ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். இந்த ராகு-கேது மாற்றம் வேலைச்சுமையையும் விவாதங்களையும் தந்தாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றியையும் தரும்.

பரிகாரம்: திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாட்களில் ராமானுஜரை மலர்மலை அணிவித்து வணங்குங்கள். கொய்யா மரக்கன்று நட்டுப் பராமரியுங்கள். மனநிம்மதி உண்டாகும்.

கும்பம்

கொடுக்கும் குணம் கொண்ட நீங்கள் விளம்பரத்தை ஒருபோதும் விரும்ப மாட்டீர்கள்! ராகுவும் கேதுவும் 27.07.2017 முதல் 13.02.2019 வரை உங்களுக்கு என்ன பலன்களைத் தரப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்று கொண்டு உங்களைத் திக்கு திசையறியாது திணற வைத்ததுடன், குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்து வைத்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார். வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர் இனி பாசத்துடன் நடந்துகொள்வார்கள்.

சந்தேகத்தால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வீர்கள். மனைவிக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்ததே! இனி ஆரோக்கியம் கூடும். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கடன் பிரச்சினைகளில் ஒருபகுதியைத் தீர்ப்பீர்கள். பழைய நகைகளை மாற்றிப் புதிய ஆபரணங்களை வாங்குவீர்கள். வெற்றிபெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விருந்தினர்களின் வருகையால் சுபச்செலவுகளும் அதிகரிக்கும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 04.04.2018 வரை ராகு பகவான் செல்வதால் குடும்பத்தில் நிலவிவந்த குழப்பங்கள் நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நண்பர்கள் மத்தியில் நிலவிய கோப, தாபங்கள் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

சனியின் பூசம் நட்சத்திரத்தில் 05.04.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் செல்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வி.ஐ.பியின் நட்பு கிடைக்கும். வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சிகள் நடக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 11.12.2018 முதல் 13.02.2019 முடிய ராகு பகவான் செல்வதால் பேச்சால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். வாகன வசதியுண்டு.

வியாபாரத்தில் புது உத்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்வீர்கள். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தொந்தரவு கொடுத்துவந்த மேலதிகாரி, இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புறவாடுவார்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து மன உளைச்சல், காரியத்தடைகள், தலைச் சுற்றல், நெஞ்சுவலி தந்த கேது இப்போது பன்னிரெண்டில் சென்று அமர்கிறார். இனி உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முன்கோபம் விலகும். எதிலும் பிடிப்பில்லாமல் விரக்தியுடன் இருந்தீர்களே! இனி எல்லாவற்றிலும் ஆர்வம் பிறக்கும். பிள்ளைகளின் கூடாப் பழக்கவழக்கங்கள் விலகும். மகனுக்குத் தடைப்பட்ட திருமணம் முடியும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் வந்து போகும். வேற்று மதத்தவர், மொழியினர், அண்டை மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 29.11.2017 வரை கேது பகவான் செல்வதால் இளைய சகோதர வகையில் அலைச்சலும் செலவும் இருக்கும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். யாரையும் நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். அதிகாரிகளை அனுசரித்துப்போவது நல்லது.

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் பயணங்கள் அதிகரிக்கும். பழைய உறவுகளை விசேஷங்களில் சந்தித்து மகிழ்வீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை எப்படி பைசல் செய்யலாமென யோசிப்பீர்கள். வாகனத்தைச் சரி செய்வீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 07.08.2018 முதல் 13.02.2019 வரை கேது செல்வதால் மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அவருடன் சின்னச் சின்ன விவாதங்கள் வந்து போகும். மனைவி வழி உறவினருடன் மனஸ்தாபங்கள் வர வாய்ப்பிருக்கிறது.

இந்த ராகு-கேது மாற்றம் ஓய்ந்து போயிருந்த உங்களை உயர வைப்பதுடன், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: உத்திரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாட்களில் ஸ்ரீகுரு ராகவேந்திரரைக் கற்கண்டு தந்து வணங்குங்கள். செம்பருத்திச் செடி நட்டுப் பராமரியுங்கள். நீண்ட நாள் கனவு நனவாகும்.

மீனம்

தன்னலமற்றப் போக்கும், வழிநடத்திச் செல்லும் குணமும் கொண்டவர்களே! ராகுவும் கேதுவும் இணைந்து 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களைத் தரப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறில் நின்ற ராகு ஒருபுறம் நல்லதைச் செய்து மறுபுறம் வீண் பதற்றம், மன உளைச்சல், மறைமுக எதிர்ப்புகள் என்று கொடுத்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். முன்கோபத்தைக் குறைக்கப் பாருங்கள். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.

எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சொந்தபந்தங்களிடையே இருந்துவந்த மனக்கசப்பு விலகும். எனினும், அவ்வப்போது பணம் கேட்டு நச்சரிப்பார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்கப் பாருங்கள். கோர்ட், கேஸ் என்று நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்காதீர்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி நன்கு விசாரிப்பது நல்லது. மகனின் அடிப்படை நடத்தைக் கோலங்கள் மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 04.04.2018 வரை ராகு பகவான் செல்வதால் வேலைச்சுமை இருக்கும். வாகனம் வாங்குவீர்கள். இட வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். வேலை கிடைக்கும். சில நேரங்களில் வீட்டில் தாயா, தாரமா என்ற தடுமாற்றம் வரும். ஷேர் பணம் தரும். போட்டிகளில் ஜெயிப்பீர்கள்.

சனியின் பூசம் நட்சத்திரத்தில் 05.04.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு, வெளிமாநிலம் செல்ல விசா கிடைக்கும். மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 11.12.2018 முதல் 13.02.2019 முடிய ராகு பகவான் செல்வதால் செல்வாக்கு கூடும். பணப்புழக்கம் உண்டு. பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடன் ஒன்று தீரும்.

வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வாடிக்கையாளரை அதிகப்படுத்தும் விதமாகக் கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தேங்கிக் கிடந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உயரதிகாரிகள் இனி உங்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுவார்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்போது கைக்கு வரும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவுகளையும் வீண் அலைச்சலையும் தந்து தூக்கமில்லாமலும் தவிக்கவைத்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்தமருகிறார். திடீர் யோகம், வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். பாதியிலேயே நின்று போன வீடு கட்டும் பணியை வங்கிக் கடனுதவியால் முழுமையாக முடிப்பீர்கள். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புது வீடு கட்டி, குடிபுகுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். புதுப் பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 29.11.2017 வரை கேது பகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். பணவரவு உண்டு. பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு மாறுவீர்கள். விலகியிருந்த உறவினர்கள், சகோதரர்கள் விரும்பி வருவார்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும்.

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். வேலை கிடைக்கும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். முடிந்து வைத்திருந்த காணிக்கையைச் செலுத்தி நேர்த்திக் கடனை முடிப்பீர்கள்.

சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 07.08.2018 முதல் 13.02.2019 வரை கேது செல்வதால் வழக்கில் வெற்றி கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும்.

இந்த ராகுவும் கேதுவும் துவண்டிருந்த உங்களுக்கு புதுத் தெம்பையும் செல்வம், செல்வாக்கையும் அள்ளித் தரும்.

பரிகாரம்: மகம் நட்சத்திரம் நடைபெறும் நாட்களில் ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். துளசிச் செடி நட்டுப் பராமரியுங்கள். தொட்டதெல்லாம் துலங்கும்.

208756 total views