விடுதலைப்புலிகளுக்கு 5 கோடி கொடுத்த எம்ஜிஆர்

Published:Saturday, 07 January 2017, 10:38 GMTUnder:Politics

விடுதலைப்புலிகளுக்கு எம்ஜிஆர் ஆட்சியின் போது தமிழகத்தில் வெளிப்படையான ஆதரவு இருந்தது.

தமிழகத்தின் இந்த மனநிலை, மத்திய அரசுக்குப் பிடிக்கவில்லை. அது மத்திய-மாநில அரசுகளின் உரசலாக மாறி இருந்தது. அப்படிப்பட்ட சிக்கலான காலகட்டத்தில்தான், எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளை கூடுதலாக ஆதரித்தார்.

அதில் அவருக்கு ஆயிரம் அரசியல் இருந்தது. உணர்வுரீதியான பிணைப்பும் இருந்தது. எம்.ஜி.ஆரின் இந்த நிலைப்பாட்டை வைத்து, அவருக்கு எதிராகப் பலர் வேலை பார்த்தனர். ஜெயலலிதா தரப்பில் இருந்து, எம்.ஜி.ஆருக்கு எதிராகச் சிலர் வேலை பார்த்தனர்.

அவர்களுக்கு தலைமையேற்று யார் வழி நடத்தியிருப்பார் என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை. விடுதலைப்புலிகள் என்றால் யார், அவர்கள் ஏன் போராடுகிறார்கள், எதற்காகப் போராடுகிறார்கள், எப்படிப் போராடுகிறார்கள் என்று எதுவுமே தெரியாத நிலையில்தான் அன்றைக்கு ஜெயலலிதா இருந்தார்.‘

அப்படி இருந்தவருக்கு, விடுதலைப்புலிகள் விவகாரத்தில் தெளிவை ஏற்படுத்தியவர் நடராஜன். முக்கியமாக விடுதலைப் புலிகள் விவகாரத்தில், மத்திய அரசுக்கும், தமிழகத்தில் உள்ள மாநில அரசுக்கும் உள்ள கடுமையான முரண்பாடுகளை அவர் புட்டு புட்டு வைத்தார்.

எம்.ஜி.ஆர் தலைமையிலான மாநில அரசாங்கம், விடுதலைப்புலிகளை ஆதரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என்பதை ஜெயலலிதாவுக்கு அவர் அழுத்திச் சொன்னார்.

எம்.ஜி.ஆர் கொடுத்த பணமும்... வரதாபாய் நடத்திய பேரணியும்..

நடராஜன் அழுத்திச் சொன்ன விவகாரம் ஜெயலலிதா மனதில் ஆழமாகப் பதிந்தது. அந்த விஷயத்தைத் தனக்கு ஆதாயமாக மாற்றிக் கொடுக்கும், ஆயுதமாகப் பயன்படுத்த நினைத்தார் அவர். அந்த நேரத்தில் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றன. ஒன்று... இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக டெல்லியில் நடைபெற்ற பேரணி, இரண்டு... விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு 5 கோடி ரூபாய் கொடுப்பதாக எம்.ஜி.ஆர் அறிவித்தது. இந்த இரண்டு விவகாரங்களை  மத்திய அரசிடம் சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னார் ஜெயலலிதா.

காரணம் அப்போது, ‘எப்படியாவது முதலமைச்சராகிவிட வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவின் மனதில் நெருப்பாய் எரிந்து கொண்டிருந்தது. குறைந்தபட்சம் துணை முதலமைச்சர் நாற்காலியிலாவது அமர்ந்துவிட வேண்டும் என்று அவர் துடித்துக் கொண்டிருந்தார். அதற்காக, எந்த எல்லைக்கும் செல்லும் நிலையில் அவர் இருந்தார். ‘எம்.ஜி.ஆர் ஆட்சி ‘டிஸ்மிஸ்’ ஆனாலும்கூட பரவாயில்லை’ என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தார்.

ஜெயலலிதாவின் கனவை நனவாக்க, பக்கத் துணைக்கு நடராஜன் இருந்தார்; சசிகலா இருந்தார்; சசிகலா குடும்பத்தின் பின்னணி இருந்தது.

இந்த நேரத்தில்தான், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 கோடி ரூபாய் அளிக்கப்போவதாக சட்டமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தார் எம்.ஜி.ஆர். அதைக்கேட்ட, இலங்கை அரசாங்கம் அலறிக் கொண்டு, ராஜீவ்காந்தியிடம் ஒப்பாரி வைத்தது. ராஜீவ் காந்தி,“புலிகளுக்கு பணம் கொடுக்க வேண்டாம்” என்று எம்.ஜி.ஆருக்குத் தகவல் அனுப்பினார்.

ஏற்கெனவே, மத்திய அரசு மீது கசப்பு உணர்வில் இருந்த எம்.ஜி.ஆர், இந்த விவகாரத்தில் திருப்பி அடிக்க முடிவு செய்தார். “நான் அறிவித்த தொகையை புலிகளுக்கு ஏற்கெனவே கொடுத்துவிட்டேன்; கொடுத்த பிறகுதான் அதை அறிவித்தேன்” என்று எம்.ஜி.ஆர் பதில் அனுப்பினார்.

ஆனால், உண்மையில் அப்போது அவர் அறிவிப்பு மட்டுமே செய்திருந்தார். பணத்தைக் கொடுத்திருக்கவில்லை. மத்திய அரசு கொடுக்க வேண்டாம் என்று சொன்னதற்கு, இரண்டு நாட்கள் கழித்தே எம்.ஜி.ஆர் புலிகளுக்கு பணம் கொடுத்தார். இந்த விவகாரத்தை அறிந்தவர்கள் வெகு சிலரே.

ஆனால், இந்தத் தகவல், ராஜீவ் காந்திக்கு உதவியாளராக இருந்த பார்த்தசாரதி அய்யங்கார் மூலம் ராஜீவ் காந்திக்கு உடனே சென்றது. உளவுத்துறை சொல்வதற்கு முன்பே, இந்தத் தகவல் ராஜீவ் காந்தியின் காதுகளுக்குப் போய் இருந்தது. யார் சொல்லி இருப்பார்கள் என்ற ஆராய்ச்சிக்கே அவசியமில்லை.

உடனே, மத்திய அரசு கொந்தளித்தது. ‘கொடுக்காத பணத்தை கொடுத்துவிட்டதாகச் சொல்வதும், அதன்பிறகு கொடுப்பதும் ஏன்?’ என்ற ஆராய்ச்சியில் இறங்கியது மத்திய அரசு. அதுபற்றிய சர்ச்சைகள் எழுந்தபோது, “இதைப் பற்றிய கேள்விகள் எல்லாம் அர்த்தமற்றவை” என்று எம்.ஜி.ஆர் கறாராகப் பதில் கொடுத்தார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்