டியூசன் என்ற பெயரில் 30 மாணவிகளுக்கு நடந்த அவலம்... பெற்றோர்களே சற்று உஷார்!...

Published:Monday, 19 December 2016, 22:47 GMTUnder:Crime

தர்மபுரி, பாலக்கோடு பகுதியில் மாணவிகளிடம் டியூசன் ஆசிரியர்கள் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகளின் வீடியோவையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். பட்டதாரி. இவரது நண்பர்கள் ஈஸ்வரன், இன்னொரு சிவக்குமார். இவர்கள் மூன்று பேரும் பாலக்கோடு மற்றும் தர்மபுரி நெசவாளர் காலனி பகுதியில் டியூசன் சென்டர் நடத்தி வந்தனர்.

இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்தனர். மாணவிகளிடம் டியூசன் ஆசிரியர்களான சிவக்குமார், ஈஸ்வரன், இன்னொரு சிவக்குமார் ஆகியோர் அத்துமீறி நடந்ததாகவும், அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளதாகவும் பாலக்கோடு போலீஸாருக்கு புகார் வந்தது.

அதன்பேரில் பாலக்கோடு போலீஸார், டியூசன் சென்டரில் விசாரணை நடத்தினார். விசாரணையில் மாணவிகளிடம் அத்துமீறிய தகவல் உண்மையென தெரியவந்தது. டீ, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்ததும் தெரிந்தது. இதில் வேதனை என்னவென்றால் மாணவிகளிடம் அத்துமீறி நடக்கும் போது அவர்களுக்குத் தெரியாமல் அதை வீடியோவாகவும் எடுத்தும் உள்ளனர்.

பிறகு வீடியோவை சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் காண்பித்து மிரட்டி மீண்டும் மூவரும் அத்துமீறியும் உள்ளனர். டியூசன் ஆசிரியர்களால் பாதிக்கப்பட்ட மாணவிகள், தங்களுக்கு நடந்த கொடுமையை யாருக்கும் தெரிவிக்கவில்லை. இதனால் டியூசன் ஆசிரியர்கள் என்ற போர்வையில் தொடர்ந்து மூன்று பேரும் மாணவிகளிடம் அத்துமீறி நடந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் பாலக்கோடு போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதனால் சப்தமின்றி நடந்த இந்த சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. தற்போது சிவக்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்த வீடியோக்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஈஸ்வரன், இன்னொரு சிவக்குமாரை போலீஸார் தேடி வருகின்றனர். டியூசன் ஆசிரியர்களால் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "தர்மபுரி மற்றும் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து அதிகளவில் மாணவிகள் இந்த டியூசன் சென்டரில் படித்துள்ளனர். டியூசன் சென்டருக்கு வரும் மாணவிகளிடம் சிவக்குமார் அன்பாக பேசுவதுண்டு.

பிறகு அந்த மாணவிகளின் குடும்ப பின்னணிகளை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பதாக சொல்லி தனியாக சென்டருக்கு வரவழைத்துள்ளார். அப்போது குளிர்பானம் அல்லது டீ வாங்கி மாணவிகளுக்கு கொடுப்பார்.

அதில் மயக்க மருந்து கலந்திருப்பது மாணவிகளுக்குத் தெரியாது. அதை குடித்ததும் மயங்கிய மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவார். பிறகு அதை தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துக் கொள்வார். மயக்கம் தெளிந்த பிறகு என்ன நடந்தது என்று கேட்கும் மாணவிகளிடம் நீண்ட நேரம் படித்ததால் மயங்கியதாக தெரிவிப்பார்.

அதை நம்பி மாணவிகளும் வீட்டுக்கு சென்று விடுவார். சில நாட்களுக்குப் பிறகு அந்த வீடியோவை சம்பந்தப்பட்ட மாணவியிடம் காண்பித்து மிரட்டுவார். வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதி, மாணவிகளும், சிவக்குமாரின் ஆசைக்கு இணைந்து விடுவார்கள். அதே வீடியோவை காட்டி, சிவக்குமாரின் நண்பர்களும் மாணவிகளை தங்கள் வசப்படுத்தி உள்ளனர்.

சிவக்குமார் மற்றும் அவர்களது நண்பர்களால் பாதிக்கப்பட்ட மாணவிகள் நடந்த சம்பவத்தை வீட்டில் தெரிவிக்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு தர்மபுரியை சேர்ந்த ஒரு மாணவியிடமும் சிவக்குமார் இதுபோல நடக்க முயற்சித்துள்ளார். அந்த மாணவி, சிவக்குமார் குறித்து வீட்டில் தெரிவித்துள்ளார்.

ரகசியமாக எங்களுக்கு அந்த பெற்றோர் தகவல் தெரிவித்தனர். மாணவிகளின் எதிர்காலம் கருதி பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடவில்லலை. அதே நேரத்தில் இந்த தகவலை ரகசியமாக உயரதிகாரிகளுக்கு தெரிவித்தோம்.

அதிரடியாக சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி, மாணவிகளின் வீடியோவை பறிமுதல் செய்துள்ளோம். அப்போது டியூசன் சென்டரில் இருந்த சிவக்குமாரை பிடித்துள்ளோம். மேலும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். பாதிக்கப்பட்ட மாணவிகள், டியூசன் சென்டரில் நடந்த முழுவிவரத்தையும் எங்களிடம் தெரிவித்துள்ளனர்"என்றார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்