விடா முயற்சியே விஸ்வரூப வெற்றி! காய்கறி வியாபாரம்... கூலிவேலை... தங்கம் அள்ளிய தங்கமகன்!

Published:Monday, 12 September 2016, 00:41 GMTUnder:Sport

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளதன் மூலம் எனக்கும் அவன் பிறந்த ஊருக்கும் மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்த்து விட்டான் மாரியப்பன் என்று அவரது தாயார் சரோஜா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பெரிய வடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (21). தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தாயார் சரோஜா, காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். தந்தை தங்கவேலு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வருகிறார்.

இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இன்னமும் வாடகை வீட்டில் தான் மாரியப்பன் குடும்பம் வசித்து வருகிறது. சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இந்த ஆண்டுதான் பி.பி.ஏ. முடித்து உள்ளார். கல்லூரி விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளதோடு, தாயாருக்கு உதவியாக காய்கறி வியாபாரமும் செய்து வந்துள்ளார் மாரியப்பன்.

மூத்த மகனான மாரியப்பனுக்கு 5 வயதில் காலில் பஸ் மோதி காயம் ஏற்பட்டது. படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் அதிகமாக இருந்த மாரியப்பனுக்கு, பெற்றோரால் உதவி செய்ய முடியவில்லை.

ஊர் ஊராக சென்று காய்கறி விற்பதில் கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தவே கஷ்டப்பட்டு வந்தார் தாயார் சரோஜா. ஆனால், மாரியப்பனுக்கு பலர் உதவி செய்தனர். பெங்களூரைச் சேர்ந்தவர்களும், உடன் படித்தவர்களும் ஆசிரியர்களும், ஊர் மக்களும் 100 முதல் ஆயிரம் வரை பணம் கொடுத்து உதவியுள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை குவித்து வந்துள்ளார் மாரியப்பன். இலங்கை மற்றும் நெதர்லாந்து நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்று இருக்கிறார்.

தற்போது, பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதனை அறிந்த ஊர் மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்