இணையத்துக்கு கெட்ட நேரம்!

Published:Tuesday, 02 April 2013, 19:11 GMTUnder:General

விரும்பியோ. விரும்பாமலோ இணையமானது எமது நாளாந்த வாழ்வின் அசைக்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது.

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இணையம் மாறிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இணையத்தின் வேகம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அது வரமாக அமைந்துவிடும் அதே சமயத்தில் வேகம் குறைந்தால் அதே இணையம் சாபமாக மாறிவிடுகின்றது.

இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் இணையத்தின் வேகம் வெகுவாகக் குறைந்துள்ளதாக அண்மையில் சர்ச்சைகள் எழுந்தன.

தேவையற்ற மின்னஞ்சல்களை 'Spam' தடுக்கும் நிறுவனமான Spamhausக்கும் , அத்தகைய மின்னஞ்சல்களை அனுப்புவதாக குற்றஞ்சாட்டப்படும் Cyberbunker க்கும் இடையேயே இடம்பெற்றுவரும் மோதலே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டது.

Cyberbunker நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட DDOS- Denial of Service attack எனப்படும் ஒரு கணினியோ அல்லது வலையமைப்போ அவை வழங்கும் சேவையை பயனாளிகள் பெறமுடியாத வகையில் முடக்க மேற்கொள்ளப்படும் சேவை மறுப்புத் தாக்குதலே வேகம் குறைந்தமைக்கான காரணமெனவும் இது இணையத்தின் 'DNS Domain Name System' என்று பரவலாக அறியப்படும் களப் பெயர் முறைமையை பாதிக்கத்தொடங்கியுள்ளதாகவும் தொழில்நுட்ப வல்லுனர்கள் விளக்கமளித்திருந்தனர்.

இப்பிரச்சினை தொடர்பில் தொழிநுட்ப உலகம் விவாதித்து வரும் வேளையில் மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போல இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.

ஆம், எகிப்தில் கடலடிப் பகுதியில் வைத்து பிரதான இணைய கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டமையால் இணைய வேகம் இன்னும் நன்றாகக் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

SMW4, IMEWE மற்றும் EIG என்றழைக்கப்படும் மூன்று இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் SEA-ME-WE 4 (South East Asia-Middle East-West Europe 4 ) எனப்படும் பிரான்சிலிருந்து சிங்கப்பூர் வரையான கேபிளானது 20,000 கிலோமீற்றர் நீளமானது.

இக் கேபிள் மலேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து, இத்தாலி, டுனீசியா மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கும் இணையச் சேவையை வழங்குகின்றது.

மற்றையவையான I-ME-WE (India-Middle East-Western Europe) எனப்படும் இந்தியா முதல் பிரான்ஸ் வரையான கேபிளானது 13,000 கிலோமீற்றர் நீளமானது. EIG (Europe India Gateway) எனப்படும் கேபிளானது 15,000 கிலோ மீற்றர் நீளமானது. இது இந்தியா, ஐக்கிய இராச்சியம், போர்த்துக்கள், மொனாகோ, பிரான்ஸ், லிபியா உட்பட சில நாடுகளை இணைக்கின்றது.

இக்கேபிள்களை பொதுவாக சேவை பெறும் நாடுகளின் தொலைத்தொடர்பாடல் நிறுவனங்கள் இயக்குவதுடன் பராமரித்தும் வருகின்றன.

இந்நிலையில் கப்பலொன்றினாலேயே கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை எகிப்தின் எலெக்ஸேன்ரியா கடற்பகுதியில் வைத்து இணைய கேபிள்களை அறுக்க முயன்றதாக தெரிவிக்கப்படும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் SEA-ME-WE கேபிளையே அறுக்க முயன்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் அவர்கள் யாருக்காக இதை செய்யமுயன்றார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

கேபிள்களின் துண்டிப்பால் இந்தியாவும் பெறுதாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய தொலைத்தொடர்பாடல் நிறுவனங்கள் இத்தகவலை உறுதி செய்துள்ளன.

இதேபோல் கடந்த 2008 ஆம் ஆண்டு இணைய கேபிள் துண்டிப்பால் பல நாடுகள் இணையத்தை உபயோகிக்க முடியாமல் போனது.

Cyberbunker இன் நடவடிக்கை மற்றும் கேபிள்கள் துண்டிக்கப்பட்டமை போன்றவற்றால் வேகம் குறைந்துள்ளமையானது இணையத்தை பெரிதும் பாதித்துள்ளது. இது நிஜமாகவே இணையத்துக்கு கெட்ட நேரமே!

 

 


 

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்