உதட்டுக்கு அழகு ஆனால்... உடலுக்கு ஆபத்து

Report
55Shares

லிப்ஸ்டிக்கில் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய காரீயம் (Lead) உள்பட பல ஆபத்தான ரசாயனங்கள் இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று தான். இப்போது `லெட்டை போலவே ஆபத்தான வேறு முக்கிய விஷயமும் இருக்கிறது’ என்று சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இந்திய மருத்துவ ஆய்வாளரான பி.எம்.ஹெக்டே.

பத்ம பூஷண் விருது பெற்ற மூத்த மருத்துவரான ஹெக்டே சொல்லும் போது, ‘‘பெண்களின் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) ஹார்மோனை தூண்டக்கூடிய வேதிப்பொருள் லிப்ஸ்டிக்கில் இருக்கிறது. அதாவது, லிப்ஸ்டிக்கில் இருக்கும் வேதிப்பொருள் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் போல பெண்களின் உடலில் செயல்படும். இதனால் மார்பின் அளவு இயல்பாகப் பெரிதாவது போலத் தோன்றி, பின்னர் மார்பகப் புற்றுநோய் உண்டாகும். இந்த உண்மையை ஐரோப்பிய நாடுகளில் லிப்ஸ்டிக் பயன்படுத்துகிற பெண்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்; அதனால், இப்போதே லிப்ஸ்டிக்கினால் உண்டாகும் ஆபத்து பற்றிய எச்சரிக்கையை பெண்களிடம் உருவாக்க வேண்டியது அவசியம்’’ என்கிறார்.

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் பற்றி நாளமில்லாச் சுரப்பிகள் மருத்துவர் ராம்குமார் கூறியதாவது: பருவமடையச் செய்வது, மார்பகம் உருவாவது, அழகு, நளினம், கவர்ச்சி என பெண்கள் பெண் தன்மையுடன் இருப்பதற்குக் காரணமே ஈஸ்ட்ரோஜென்தான். பெண்களின் பாலியல் உறவின் விருப்பத்தைத் தூண்டுவதும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான்.

அழகு சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மார்பகங்களை பெரிதாக்க ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களை ஊசிகளாகவும், மாத்திரைகளாகவும் பயன்படுத்துவது உண்டு. ஆனால், விவரம் அறியாமல் ஈஸ்ட்ரோஜெனை பயன்படுத்தும்போதோ அல்லது லிப்ஸ்டிக் போன்ற காஸ்மெட்டிக் பொருட்கள் மூலம் மறைமுகமாகத் தூண்டப்படும்போதோ மார்பகப் புற்றுநோய் பிரச்னை வருவதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு.

இதற்குக் காரணம் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் மார்பகங்களின் செல்களுக்கும், கருப்பை செல்களுக்கும் அதிகமாக உண்டு என்பதுதான். அதனால்தான் ஈஸ்ட்ரோஜென் அதிகளவில் பெண்களின் உடலில் சுரக்கும்போது மார்பகப் புற்றுநோயும், கருப்பைப் புற்றுநோயும் எளிதாக உருவாகி விடுகிறது.சரும நல மருத்துவர் ப்ரியா கூறியதாவது: எண்ணெய், மெழுகு, கொழுப்பு இவற்றை அடிப்படையாக வைத்துத்தான் லிப்ஸ்டிக்கை தயாரிக்கிறார்கள். இதில் நிறத்துக்காக சில வேதிப்பொருட்களைச் சேர்ப்பார்கள். மூலப்பொருட்களாக சேர்க்கப்படுவதில் லெட், காட்மியம், குரோமியம், மாங்கனீசு, அலுமினியம் போன்ற ஹெவி மெட்டல்கள் கலந்திருக்கும்.

நிறத்துக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்களிலும் இந்த ஹெவி மெட்டல்கள் இருக்கும். லிப்ஸ்டிக் தயாரிப்பாளர்கள் இந்த விவரங்களை மறைத்தாலும் பல நாடுகளின் ஆய்வுகளில் இந்த ஹெவி மெட்டல்கள் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, லெட் இருப்பது அமெரிக்கா, கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

‘‘பொதுவாக லிப்ஸ்டிக்கால் சரும அலர்ஜி வரலாம். உதட்டில் வெடிப்பு ஏற்படுவது, உதடு முழுவதும் கருப்பாவது, மச்சம் போல் திட்டுத்திட்டாக சில இடங்களில் மட்டும் கருப்பாவது போன்ற சின்னச்சின்ன பிரச்னைகள் வரலாம். சரும அலர்ஜி வரலாம். சில நேரங்களில் லிப்ஸ்டிக்கின் நிறமிகளால் உதட்டின் சருமம் உறியலாம். குறிப்பாக, வெயிலில் செல்லும்போது புற ஊதாக் கதிர்களினால் உதட்டின் சருமம் உறியும் நிலை ஏற்படும். மேலும், லிப்ஸ்டிக்கை விழுங்குவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. முக்கியமாக தண்ணீர் குடிக்கும்போதோ, சாப்பிடும்போதோ லிப்ஸ்டிக்கை விழுங்கிவிடுவார்கள். சருமத்தில் என்ன தடவினாலும் அது உடலால் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கும். அதேபோல், லிப்ஸ்டிக்கும் உதட்டிலிருந்து ரத்தத்தில் கலக்கும் வாய்ப்பு அதிகமாக உண்டு என்றார்.

குழந்தைகளை விட்டுவிடுங்கள்

1.லிப்ஸ்டிக்கை ஒருநாளில் அதிக முறை பயன்படுத்துவதும், அதிக அளவில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதும் தவறானது.

2.மிகவும் இளம்வயதிலேயே லிப்ஸ்டிக் பயன்படுத்த ஆரம்பிப்பதும் பெரிய தவறு. அழகுபடுத்துகிறேன் என்ற பெயரில் குழந்தைகளுக்கு லிப்ஸ்டிக் போட்டுவிடக் கூடாது.

3.ஆர்கானிக் வகை லிப்ஸ்டிக்குகள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். லிப்ஸ்டிக் பயன்படுத்தி உதட்டின் நிறம் மாறினாலோ, கருப்பு மார்க் வருகிறது என்றால் அந்த லிப்ஸ்டிக் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். மருத்துவ ஆலோசனையும் அவசியம் என்கிறார் மருத்துவர் ப்ரியா.

2475 total views