ஆபத்தின் விளிம்பில் எடுக்கப்படும் “செல்பி ”க்கள் !

Report
69Shares

எத்தனையோ ’கோடி மக்கள் வாழும் இந்த உலகில் பாடசாலை பருவத்திலிருந்து எம்முடன் கூடி விளையாடியவர்கள் தொடங்கி உலகின் எங்கோ ஓர் மூலையில் வசிக்கும் முகம் தெரியாத நபர் வரை தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள இந்த சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவி செய்வது நாம் மறுக்க முடியாத உண்மை.

ஆனால் நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் என்பது போல நன்மை இருக்கும் இடத்தில் தான் தீமையும் இருக்கின்றது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் இன்று நாம் எத்தனையோ நன்மைகளை பெற்றிருந்தாலும் அதனால் ஏற்படும் தீமைகள் மனிதனின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு அமைந்துள்ளது.

அவ்வாறன ஒன்றுதான் சிறுவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை எல்லோராலும் விரும்பப்படும் இந்த “செல்பி“ மோகம். சந்தோசம் என்றாலும் துக்கம் என்றாலும் எல்லாவற்றையும் உறவினர்களிடம் பகிர்ந்துக் கொள்கின்றார்களோ இல்லையோ ஆனால் “செல்பி“ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள்.

இவ்வகை புகைப்படங்கள் மூலம் தன்னம்பிக்கை மற்றும் சுய கௌரவம் அதிகரிப்பதாக மனோரீதியாக நம்பப்படுகிறது

இதுவரை 9௦ மில்லியன் செல்பி புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.“அளவிற்கு மிஞ்சினால் அமுர்தமும் நஞ்சு“ என்பது மிகவும் சரியே. ஏனெனில் மனிதனின் எல்லா செயல்களுக்கும் உச்சம் என்று ஒன்று இருக்கும். இந்த “செல்பி“ மோகமும் அவ்வாறுதான்.

அதிகப்படியான “செல்பி“ புகைப்படங்களுடன் அவற்றின் விருப்பு மற்றும் பின்னூட்டங்களுக்காக காத்திருப்பதால் தன் உணர்வே இல்லாமல் அதில் மூழ்கிவிடுகின்றனர் என்பது ஒரு மனோதத்துவ ரீதியான குற்றச்சாட்டு.

சமூகத்தில் ஆழமற்ற தன்மையை இம்மாதிரியான செயல் வெளிக்காட்டுவதாக மனோதத்துவ மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அத்தோடு பெண்கள் சில நேரம் தன்னை மறந்து அரை குறை ஆடைகளுடன் “செல்பி“ எடுத்துக்கொள்வது கலாசார சீரழிவை ஏற்படுத்துகிறது.

இதனை எல்லாம் விட முக்கிய விடயம் தான் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் “செல்பி“ க்கள்.

மனிதன் இன்று ஆபத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றான். ஆபத்தை தர கூடிய இடங்களில் விபரீதமான “செல்பி“க்களை எடுப்பது தற்போது நாகரீகமாகிவிட்டது.அதை தான் தாமி “செல்பி” என்கின்றனர். அதாவது தங்களை தனியாகவோ குழுக்களாகவோ பின்னணி சூழலுடன் அல்லது பொருட்களுடன் வெளிக்காட்டிக் கொள்வதற்காக எடுக்கப்படும் படங்கள் ஆகும்.

இதை மேலும் விவரித்தால் சுமார் பதினைந்து வகையான “செல்பி“ க்கள், எட்டு முதல் பத்து வகையான முக பாவங்கள் என்று சுட்டுத்தள்ளி இன்ஸ்டாகிராம் செயலிகளில் பதிவிடுகிறார்களாம் “செல்பி“ விரும்பிகள்.

தங்களுக்கு விருப்பமான இடங்கள், விருப்பமான மனிதர்கள், உடைகள் என்று தேர்வு செய்துகொண்டு சிரித்த முகத்துடன் தங்கள் இறுதி புகைப்படத்தை தாங்களே எடுத்துக்கொள்ளும் முயற்சி தான் ஆபத்தின் விளிம்பில் எடுக்கப்படும் “தாமி”க்கள் .

உயரமான இடத்தில் இருந்து விழுதல், ஆபத்தான கடல் பகுதியில் மூழ்குதல், இரயிலில் மோதுண்ட மனிதர்கள் என்று பெரும்பாலான தற்கொலைக்கான காரணிகள் இவர்களுக்கும் பொருந்தும்.

நீளமான ரயில் தண்டவாள பாதைகளில் தங்கள் நண்பர்களுடன் “செல்பி” எடுத்துக்கொண்டால் அவர்கள் நட்பு நீண்ட காலம் தொடரும் என்பதை பறைசாற்றும் என்பது ஒரு சிலரது எண்ணமாம். அதுவே விபத்துகளுக்கும் காரணமாக அமைகிறது.

மார்ச் 2014 முதல் செப்டெம்பர் 2016 முடிய எடுத்த ஒரு கணக்கெடுப்பில் உலகம் முழுவதும் 127 “செல்பி“ மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் 76 மரணங்கள் இந்தியாவில் சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மும்பையில் மட்டும் சுமார் பதினைந்து இடங்களில் செல்பி புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அழகானது, சில நேரங்களில் ஆபத்தானதும் கூட. தட்பவெப்ப சூழலுக்கு ஏற்றவாறு மாறும் கடல் அலைகளின் தன்மை பற்றி உணராமல் ராட்சத கடல் அலைகளில் “செல்பி“ எடுத்தலும்கூட பெரும் ஆபத்தை தரும்.கரடுமுரடான ஊசிமுனை வளைவுகள் உள்ள மலைப்பகுதிகளுக்கும் சம தளத்திற்குமான நிலப்பரப்பின் அளவுகளை அவர்களால் சரிவர உடனடியாக கணக்கிட முடியாமல் போதல் மலை உச்சி விபத்துகளுக்கு காரணங்களாக அமைகிறது.

வனவிலங்குகளின் தன்மை நேரத்திற்கு நேரம் மாறக்கூடியவை. தங்களை தற்காத்துக்கொள்ள மனிதர்களை தாக்கவும் செய்யும். ஆபத்தை உணராமல் காடுகள் மற்றும் காப்பகங்களில் மிருகங்களின் அருகில் சென்று செல்பி எடுக்க முயல்வது பேராபத்து.

அமெரிக்கா மற்றும் ரஷ்யர்களின் “செல்பி“ மரணங்களில் சில ஆயுதங்களால் நடந்தவை. தங்கள் தற்காப்புக்காக வைத்திருக்கும் கைத்துப்பாக்கிகளை கொண்டு வித்தியாசமான செல்பிக்களுக்கு முயற்சி செய்துள்ளனர். அதன்போது அதில் குண்டு வெளிப்பட்டு விபரீதத்தில் முடிந்திருக்கிறது.

தளர்வான மனநிலையில் இருக்கும்பொழுது பாதுகாப்பு பற்றியும் கவனிக்க தவறிவிடுகின்றனர் பலர்.

அபாயமான அல்லது ஆபத்து விளைவிக்கக்கூடிய பகுதிகளில் தங்களது துணிச்சலை மிகக் குறைவாக வெளிப்படுத்துதல் நன்று.

சமூக வலைத்தள படங்களை பதிவிறக்கம் செய்து தவறாக சித்தரிக்கும் மென்பொருளும் இலவசமாக இணையத்தில் உள்ளது.

ஆகவே இயன்றவரை சுயகட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

3052 total views