|
|
சரணடைய வந்த புலிகளின் தலைவர்களைச் சுடச் சொன்னது கோத்தபாய; முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா (படங்கள் இணைப்பு)
|
கடைசி கட்ட சண்டையின்போது வன்னியில் நடந்த பல விடயங்கள் தமக்குத் தெரியாது என்றும் அப்போதைய ராணுவ தளபதியான சரத் நல்லபிள்ளைக்கு நாடகம் ஆடுகிறார். அவர் கூறும்போது,
"சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்களை உடனடியாகவே படுகொலை செய்யுமாறு வடபகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த முக்கிய இராணுவ கட்டளை அதிகாரிக்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவுகளை வழங்கியிருந்தார். இறுதிக்கட்ட சண்டையில் எனக்கு அதிக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. அப்போது விடுதலைப்புலிகளின் மூன்று முக்கிய தலைவர்கள் சரணடைய முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்த அது தொடர்பான தகவல்கள் நோர்வே, மற்றும் பிற வெளிநாட்டு அமைப்புக்கள், பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போரை நடத்திக்கொண்டிருந்த எனக்கு இவை அறிவிக்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.
ஆனால் நான் பின்னர் அறிந்தேன் இந்த தகவலை பசில் ராஜபக்ஷதான் கோத்தபாயாவுக்கு தெரிவித்திருந்தார் என்று. ஆனால் அவர் 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவேந்திர சில்வாவை தொடர்பு கொண்டு சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்களை உடனடியாக கொல்லுமாறு கட்டளையிட்டிருந்தார். இதனை தொடர்ந்து மே 18 ஆம் திகதி அதிகாலை சரணடைய முயன்ற விடுதலைப்புலிகளின் தலைவர்களான அரசியல்துறை பொறுப்பளர் பா. நடேசன், சமாதான செயலக பணிப்பாளர் சீ. புலித்தேவன், கட்டளை தளபதி கேணல் ரமேஷ் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆனால் இவர்கள் மூவரின் சடலங்களையும் அரச படைகள் 18 ஆம் திகதி காலையில் கண்டெடுத்ததாகவே அரசாங்கம் செய்தி வெளியிட்டது. இந்த சம்பவங்கள் அனைத்தும் போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளை 100மீற்றர் x 100மீற்றர் பரப்பளவுக்குள் முள்ளிவாய்க்கால் பகுதியில் முடக்கிய பின்னரே நடந்தது என்றுள்ளார் சரத் பொன்சேகா.
மேற்படி மூவரும் சரணடைவதற்கு முன்னர் இரு அரசியல் தலைவர்களுக்கும் வெளிநாட்டு அரசாங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், கொழும்பு அதிகாரிகள் ஆகியவர்களுக்கிடையேயும் பல மின்னஞ்சல்கள், கைத்தொலைபேசி அழைப்புகள் செய்திகள், தொலைபேசி அழைப்புக்கள் என்பன பரிமாறப்பட்டிருந்தன. இதன்போதே வெள்ளைகொடிகளை பிடித்தவாறு, ராணுவத்துக்கு தீங்கிழைக்க மாட்டோம் என்பதைக் காண்பிக்கும் விதமாக கைகளை உயர்த்திக் கொண்டு தம்மை நோக்கி வருமாறு அவர்களிற்கு அறிவிக்கப்பட்டதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இந்த விதமாக சரணடையும்படி பசில் ராஜபக்சாவும், கோத்தபாய ராஜபக்ஷவுமே வெளிநாட்டு தரகர்களூடாக புலிகளின் தலைவர்களுக்கு அறிவித்திருந்தனர் எனவும் சரத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இத்தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக இப்போது மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவை சண்டே லீடர் பத்திரிகை தொடர்பு கொண்டபோது ஒரு கருத்தும் வழங்க முடியாதென அவர் மறுத்துவிட்டாராம். இவை குறித்து தாம் ராணுவ பேச்சாளரிடம் கேட்டறிந்துதான் உறுதி செய்யவேண்டும் என அவர் கூறியுள்ளாராம்.



hits
|
|
|
<<
Back
|